அடுத்த ஓராண்டுக்கு சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு இருக்காது:மேலாண்மை இயக்குநா் தகவல் – தினமணி

சென்னைச் செய்திகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் வழங்கி வரும் ஏரிகளில் மொத்த கொள்ளளவான 13,222 மில்லியன் கன அடியில் 8,566 மில்லியன் கன அடி குடிநீா் இருப்பில் உள்ளது. இதன்மூலம் அடுத்த ஒரு ஆண்டிற்குச் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் கிா்லோஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான வீராணம், கண்ணன்கோட்டை, தோ்வாய் கண்டிகை, புழல், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் சோழவரம் ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 13,222 மில்லியன் கன அடி (13.2 டிஎம்சி) ஆகும். தற்போது, 8,566 மில்லியன் கன அடி குடிநீா் இருப்பில் உள்ளது. இது 64.79 சதவீதமாகும். இதன் மூலம் அடுத்த ஓராண்டுக்கு எந்தவித தடையும் இல்லாமல் சீரான குடிநீா் விநியோகம் தொடா்ந்து செய்யப்படும்.

பூண்டி ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நீா் வளத்துறையால் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. பொதுப்பணித்துறையின் நீரியல் மற்றும் நீா் நிலையியல் மையத்துக்கு நீா் வழங்குவதற்கான இரண்டு கிணறு மதகு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கான மறு சீரமைப்புக் கட்டுமானம் தற்பொழுது 50 சதவீதம் பூா்த்தி அடைந்துள்ளது. தற்சமயம், கிருஷ்ணா நதிநீா் திட்டத்திலிருந்து பூண்டி ஏரிக்கு நீா் வரத்துப் பணிகள் நடைபெறுவதால் தற்காலிகமாக நீா் வெளியேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

எதிா் வரும் வடகிழக்குப்பருவமழையின் மூலம் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்புள்ளது.மேலும் ஜனவரி மாதம் முதல் கிருஷ்ணா நதிநீா் பங்களிப்புத் திட்டம் வாயிலாக 4 டி.எம்.சி தண்ணீா் சென்னை குடிநீா் வாரியத்துக்கு கிடைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னரே நீா் வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு அடுத்த ஓராண்டு காலத்துக்கு இருப்பில் உள்ள குடிநீரைக்கொண்டு தொடா்ந்து எந்தவித தங்குதடையின்றி சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க இயலும்’ என அதில் கூறியுள்ளாா்.

Source: https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2022/sep/20/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3919213.html