சிங்கப்பூராக மாறப்போகும் சிங்காரச் சென்னை! -நிறைவேறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: புதிய பாய்ச்சலுக்கு சென்னை நகரம் தயாராகி வருகிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் பல வருடங்களாக முடங்கிக் கிடந்த பணிகள் வேகமெடுத்துள்ளன. மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் சீரமைப்பு, மதுரவாயல்-துறைமுகம் சாலை, மாஸ்டர் பிளான்-3 ஆகியவற்றால் சென்னை நகரம் புதிய பொலிவைப் பெற உள்ளது.

மழைக்காலம் வந்துவிட்டாலே சென்னைப் பெருநகர மக்கள் அச்சத்தில் உறைவது என்பது இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. காரணம், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய கசப்பான அனுபவங்கள்தான்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையும் அதன் தொடர்ச்சியாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதால் பல்லாயிரம் வீடுகள் நீரில் மூழ்கின. மக்கள் நீண்டகாலம் சேமித்து வைத்திருந்த பொருள்களை எல்லாம் வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களால் மீள முடியவில்லை.

தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மழைநீர் வடிகால் வாய்க்கால்களை மறுசீரமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இப்பணிகளை வேகப்படுத்துவதால், கடந்த அதிமுக ஆட்சியில் கிடைத்த அனுபவத்தை, இந்தமுறை சென்னை மக்கள் பெறமாட்டார்கள் என உறுதியாக நம்பலாம்.

தமிழர்களை மீட்கும் நடவடிக்கை! நீங்கள் தலையிட வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!தமிழர்களை மீட்கும் நடவடிக்கை! நீங்கள் தலையிட வேண்டும்! பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

மதுரவாயல்-துறைமுகம் சாலைப் பணி

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மதுரவாயல் டு எண்ணூர் துறைமுகம் சரக்குப் போக்குவரத்து சாலைப் பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முடக்கி வைத்திருந்தார். இதற்காகச் செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு திட்டமும் முழுமை பெறாமல் முடங்கியே கிடந்தது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற ஓராண்டு காலத்துக்குள் இத்திட்டம் மீண்டும் புதிய பொலிவைப் பெற உள்ளது. மதுரவாயல் டு வானகரம் வரையில் நவீன வசதிகளுடன் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றப்பட உள்ளது. அதற்கான வரைபடத்தையும் தேசிய நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது. மதுரவாயல் – துறைமுகம் சாலைப் பணிக்காக பத்து ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட 115 தூண்களில் 85 தூண்டுகளை மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்றும் மீதமுள்ள புதிய பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிப்பது என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வேகமே மு.க.ஸ்டாலினின் ஓராண்டுகால ஆட்சிக்குச் சரியான சான்றாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் திமுக ஆட்சி காலத்துக்குள் இப்பணிகள் முடிக்கப்பட உள்ளன.

ஈரடுக்கு பறக்கும் வழிச்சாலை

‘பழைய பாலத்துக்கும் தற்போது வரவுள்ள ஈரடுக்கு புதிய திட்டத்துக்கும் இடையே என்ன வித்தியாசம்?’ என்ற கேள்வி எழுகிறதா? முன்பு அறிவிக்கப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்துக்காக உயர் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது தடையற்ற சரக்குப் போக்குவரத்தை உருவாக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.1,468 நிதி ஒதுக்கப்பட்டது. புதிய திட்டத்தின் மூலம் ஈரடுக்கு மேம்பாலமாக மாற்றப்படுகிறது. இதற்காக ரூ.5855 கோடியாக நிதி ஒதுக்கீட்டை அரசு அதிகரித்துள்ளது. புதிய திட்டத்தின்படி கீழே ஒரு பாலமும் அதன்மேலாக ஒரு பாலமும் அமைக்கப்பட உள்ளது. ஓர் அடுக்கில் வாகனங்கள் செல்வதற்காகவும் மறு அடுக்கில் வாகனங்கள் வருவதற்காகவும் பாதை மாற்றியமைக்கப்பட உள்ளது. இதனால் வாகன நெரிசல் இல்லாமல் சீர் செய்யப்படும். பயண நேரமும் குறையும். தாம்பரத்திலிருந்து செல்லும் வெளிவட்டச் சாலையில் இந்த ஈரடுக்கு சாலை தொடங்கும். நேப்பியர் பாலம் முதல் துறைமுகம் வரையிலான 9 கி.மீட்டர் தூரம் வரையில் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. கூவம் ஆற்றில் ஏற்கெனவே போடப்பட்டிருந்த தூண்கள் அகற்றப்பட்டு புதிய ஈரடுக்கு தூண்கள் உருவாக்கப்படும். மேலும், கத்திப்பாரா பகுதியில் உள்ள ‘குளோவர்’ வடிவ பாலம் போன்றே நவீன பாலம் ஒன்றும் வடிவமைக்கப்படும். பழைய பாலத்தைவிடவும் இது பல்வேறு வசதிகளைக் கொண்டது. மதுரவாயல்-துறைமுகம் சாலைப் பணிகள் மட்டுமல்லாமல், இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அடையப் போகின்ற மாற்றங்களுக்கான திட்டங்களை வகுக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. அதன் ஓர் அங்கமாக, ‘சென்னை மாஸ்டர் பிளான் 2027 – 2046’ என்ற திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்காக சென்னையில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் தா.மோ. அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதில், முன்மாதிரி வரைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. ‘அதென்ன மாஸ்டர் பிளான்-3?’ என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இதைப் பற்றி அறிவதற்கு முன்னர், கடந்தகால மாஸ்டர் பிளான்களை பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

முதல் மாஸ்டர் பிளான்

சென்னை ஒரு வரலாற்று நகரம்; தமிழ்நாட்டின் தலைநகரம். இன்னும் விளக்கமாகச் சொன்னால் இந்திய அளவில் 4 ஆவது பெருநகரம். இந்நகரத்துக்கு 400 ஆண்டுகால சரித்திரம் உண்டு. வளர்ந்து வரும் நாகரிகத்துக்கு ஏற்ப சென்னையும் தன்னை மாற்றிக் கொண்டே வருகிறது. இந்த மாற்றம் தானாக உருவானது அல்ல. அதற்கான திட்டங்களை வகுப்பதற்காக 1975 ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டில் சென்னையின் முதல் மாஸ்டர் பிளான் (1976-1996) உருவானது. அப்போது சென்னையின் மக்கள் தொகை வளர்ச்சி என்பது 71 லட்சமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதற்கேற்ப, நகரத்தின் உள்கட்டமைப்பைச் சிறப்பாக அமைப்பதற்கு செயல்திட்டம் தீட்டப்பட்டது. அதன் ஒருபகுதியாகத்தான் ‘கோயம்பேடு பேருந்து நிலையம்’, ‘பறக்கும் ரயில் திட்டம்’ மற்றும் தரமணி ‘டைடல் பார்க்’ ஆகியவை வந்தன.

இரண்டாவது மாஸ்டர் பிளான்

முதல் மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட்ட பிறகு அசுர வேகத்தில் சென்னை வளர்ச்சி பெற்றது. இதனால், இரண்டாவது மாஸ்டர் பிளானுக்கான (2006-2026) அவசியம் ஏற்பட்டது. இதற்காக புதிய கோணத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. பழைய மாஸ்டர் பிளான் திட்டத்தால் மூன்று மடங்கு அளவுக்கு சென்னை வளர்ச்சியடைந்தது. சுமார் 1189 சதுர கி.மீ அளவுக்குப் பரந்து விரிந்த சென்னை, 88 லட்சம் மக்களை உள்ளடக்கியிருந்தது. இதன்படி, தாம்பரம் முதல் ஆவடி வரை சென்னை மாநகர எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது. ‘மெட்ரோ ரயில்’, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்றவை சென்னைக்குக் கிடைத்தன. மாஸ்டர் பிளான் திட்டங்களால் வளர்ந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 1991 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மக்கள் தொகையில் 34.15 சதவீதம் பேர் நகரத்தில் வசித்தனர். இது 2011 ஆம் ஆண்டு 48.45 சதவீதமாக உயர்ந்தது. ‘2026 ஆம் ஆண்டில் 75 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிப்பார்கள்’ என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதற்கேற்ப, தனது உள்கட்டமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் சென்னை உள்ளது. இதற்காக மூன்றாவது சென்னை மாஸ்டர் பிளான் (2027-2046) திட்டம் வகுக்கப்பட உள்ளது.

சென்னைப் பெருநகர எல்லைகள்

மாஸ்டர் பிளான் திட்டம்-3 தொடர்பான கூட்டத்தில், ‘சென்னையின் மக்கள்தொகை 1 கோடியே 26 லட்சமாகப் பெருகும்’ என்றும் ‘நகரத்தின் விரிவாக்கம் 5,904 சதுர கி.மீட்டராக மாற்றப்படும்’ என்றும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னைப் பெருநகர மாநகராட்சிக்குள் 8 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் அமைந்துள்ள 179 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இதன் பரப்பளவு என்பது 1,189 சதுர கி.மீ எல்லையைக் கொண்டுள்ளது. இது வரும்காலத்தில் 5,904 சதுர கி.மீட்டராக விரிவாக்கம் பெற உள்ளது. இதற்காக, ‘செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் முதல் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் வரை சென்னை மண்டலமாக மாற்றப்படலாம்’ என்றொரு கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மாஸ்டர் பிளான் நடைமுறைக்கு வரும்போது, சிங்கப்பூரை போன்று சென்னை மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதற்கான பணிகள் அனைத்தும் 2027 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதற்காக மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் நோக்கம் என்ன?

சென்னை நகரின் வளர்ச்சிக்கு, பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை https://cmavision.in/ என்ற தளத்தின் மூலம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது சென்னை மாஸ்டர் பிளான் மூலம் போக்குவரத்து நெரிசல், அடிப்படை உள்கட்டமைப்பு, திடக்கழிவு மேலாண்மை, காலநிலை மாற்றம், இயற்கை பேரிடர் எனப் பல கோணங்களில் சென்னைப் பாதிக்காத வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. ‘எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கேற்ப, அனைத்து முனைகளில் சிந்தித்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில், மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்’ என்கிறார், தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன். மாஸ்டர் பிளான்-3 குறித்துப் பேசியுள்ள தமிழ்நாடு வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துச்சாமி, ‘இந்தத் திட்டத்தை வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படுத்த வேண்டும். சென்னையை அனைத்துக்கும் தயார் நிலையில் எதிர்கொள்ளும்படி மாற்ற வேண்டும்’ என்கிறார். ‘இருபது ஆண்டுகளில் ஒரு நகரம் எப்படி உருவெடுக்கப் போகிறது?’ என்பதைக் கணித்து அதற்கேற்ப உள்கட்டமைப்பை உருவாக்குவதுதான் ‘மாஸ்டர் ப்ளான்’. இதனை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டுகளில் செயல்வடிவத்தை நோக்கி நகர்வதுதான் ஹைலைட்டான விஷயம்.

English summary
Chennai corporation extended area plan: According to the 1991 census, 34.15% of the population of Tamil Nadu lived in urban areas. It increased to 48.45% in 2011. It is predicted that 75% of the population will live in urban areas by 2026. Chennai city has to change its development and infrastructure accordingly. So accordingly ‘Chennai Master Plan Three 2027 – 2046’ has been prepared. A consultation meeting for this was held in Chennai by Ministers Muthusamy and It was led by Anbarasan. Prototype drafts for this were discussed.

Source: https://tamil.oneindia.com/news/chennai/how-expanding-the-chennai-metropolitan-area-up-to-acharappakkam-and-arakkonam-will-change-the-city-476862.html