சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு: மேயர் பிரியா – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சிங்கார சென்னை திட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயர் பிரியா, “மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் வரும் அக்டோபர் 10-க்குள் முடிக்கப்படும் என்றும், பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

இதற்கு முன்னதாக, முன்னாள் மேயர் சிவராஜின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் உள்ள அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன், “மழைநீர் வடிகால் பொறுத்தவரை சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் சிங்கார சென்னை திட்டத்தில் இரண்டாக பிரித்து பணிகள் செய்து வருகிறோம். சிங்கார சென்னையைப் பொறுத்தவரை இரண்டில் ஒரு பகுதியில் 95 சதவீத பணி நிறைவடைந்து இருக்கிறது. இரண்டாவது பகுதியைப் பொறுத்தவரை 35 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கிறது.

கடந்த ஆண்டு சென்னையில் எந்த இடங்களில் வெள்ளம் அதிகமாக பதிக்கப்பட்டதோ, அந்த இடங்களை தேர்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இதில் இன்னும் 5 சதவீத பணிகள் மட்டுமே இருக்கிறது. அதுவும் அக்டோபர் 10-ம் தேதிகுள் நிறைவடைந்துவிடும். வெள்ளத் தடுப்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலத்திற்கு 17 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து இருக்கிறோம். மழை தேங்கி உள்ள பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/875873-95-precent-completion-of-storm-water-drain-works-in-singara-chennai-project.html