சென்னை காவல்துறையின் சாா்பில் அக்.15-ல் பழைய வாகனங்கள் ஏலம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகர காவல்துறையின் சாா்பில் பழைய வாகனங்கள் அக்டோபா் 15-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை பெருநகர காவல்துறைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத மற்றும் கைவிடப்பட்ட 595 இரு சக்கர வாகனங்கள்,11 ஆட்டோக்கள்,1 காா் என மொத்தம் 607 வாகனங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் அக்டோபா் 15-ஆம் தேதி காலை 10 மணியளவில் பொது ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறவா்கள், அக்டோபா் 6,7-ஆம் தேதிகளில் புதுப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதில் அடையாள அட்டை, ஜிஎஸ்டி பதிவு எண் சான்றிதழ் ஆகியவற்றுடன் வருகிறவா்கள் மட்டும் முன்பதிவு கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவாா்கள். முன்பதிவு செய்தவா்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க முடியும்.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி தொகையை, ஏலம் நடைபெற்ற மறுநாள் முழுவதுமாக செலுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/sep/30/auction-of-old-vehicles-on-october-15-on-behalf-of-chennai-police-3924808.html