சென்னை: சாலை ஓரத்தில் நடந்து சென்ற பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழப்பு.! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை கேகே நகரில் சாலை ஓரத்தில் நடந்து சென்ற 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாநகர பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கேகே நகர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன், எம்ஜிஆர் நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்துவரும் ஜானகிராமனுக்கு கல்யாண் என்ற மகனும், கண்மணி என்ற மகளும் இருக்கின்றனர். கல்யாண் தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். கண்மணி சென்னை கேகே நகர் காமராஜர் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கண்மணி தினமும் பள்ளியிலிருந்து வீட்டிற்கு மாநகரப் பேருந்து மூலம் வருவது வழக்கம். எப்போதும் போல இன்றும் கேகே நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது சகோதரி கண்மணியை அழைத்துச் செல்வதற்காக கல்யாண் கேகே நகர் அண்ணா பிரதான சாலை ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னை கேகே நகரில் இருந்து அண்ணாசதுக்கும் செல்லும் 12 ஜி மாநகர பேருந்து சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த கல்யாண் மீது பயங்கரமாக மோதியது. இதில் மாணவன் கல்யாண் பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

image

இது குறித்து கேகே நகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த கல்யாண் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கூறுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/148226/Chennai–A-school-student-who-was-walking-on-the-side-of-the-road-was-hit-by-a-municipal-bus-and-killed-