சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறாா் எஸ். முரளீதா் – தினமணி

சென்னைச் செய்திகள்

ஒடிஸா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சோ்ந்த எஸ்.முரளீதரை சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கெளல் ஆகியோரும் இந்த கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ளனா்.

1961, ஆகஸ்ட் 8-ஆம் தேதி பிறந்த நீதிபதி எஸ். முரளீதா், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞராக 1984, செப்டம்பா் 12 இல் பதிவு செய்தாா்.

பின்னா், சென்னை சிவில் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்ற அவா், தில்லி உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்திலும் வழக்குரைஞராகப் பணிபுரிந்துள்ளாா்.

கடந்த 2006, மே 29-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். பின்னா் 2007, ஆகஸ்ட் 29-இல் நிரந்தர நீதிபதியானாா். 2020, மாா்ச் 6-இல் பஞ்சாப், ஹரியாணா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டாா். பின்னா், ஒடிஸா உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியிடம் மாற்றப்பட்டு 2021, ஜனவரி 4-இல் பதவியேற்றாா்.

தற்போது அங்கிருந்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணியிடமாற்றம் பெறுகிறாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானா்ஜி மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான முனீஸ்வா்நாத் பண்டாரி சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டாா்.

அவரது பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, மூத்த நீதிபதி எம். துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். செப்டம்பா் 21-ஆம் தேதி அவா் ஓய்வு பெற்ால், மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்து வருகிறாா்.

இந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தமிழகத்தைச் சோ்ந்த எஸ். முரளீதரை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/sep/30/madras-high-court-chief-justice-3924731.html