600 பேருக்கு டெங்கு | வீடுகளுக்கே ஆய்வு செய்ய வரும் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,084 சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு 954 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,317 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 229 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டிற்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 247 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு குழுவிற்கு 3 நபர்கள் என நீர்வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் 7.30 வரையிலும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10,97,632 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 291 பேருக்கும், செப்டம்பர் மாதம் 309 பேர் என்று மொத்தம் 600 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரும் இடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தற்பொழுது மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/876416-chennai-corporation-employees-coming-to-inspect-houses-for-dengue.html