சென்னை: பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்த வாலிபர் கைது.! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எம்பிஏ பட்டதாரி வாலிபரை செல்போன் சிக்னல் மூலம் பிடித்து கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக மிரட்டல் விடுத்தார். தொடர்ச்சியாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், செல்போன் சிக்னலை கொண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். மீஞ்சூர் அருகே செல்போன் சிக்னல் காட்டியதை தொடர்ந்து மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீஞ்சூர் போலீசார் சிக்னலை ஆய்வு செய்ததில் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இருந்த நபரை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

image

விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் அனுப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லோகேஷ் (எ) விக்னேஷ் என்பதும், இவர் எம்பிஏ பட்டதாரி என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஐபிசி 506, 507 ஆகிய 2பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் போலீசார் மது போதையில் இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசினாரா அல்லது வேறு ஏதேனும் சதி செயலில் ஈடுபட முயன்றுள்ளாரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/148286/Chennai–A-teenager-who-threatened-to-explode-bombs-at-various-places-was-arrested-