சென்னை, சேலம் பி.எப்.ஐ. அலுவலகங்களுக்கு சீல் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை, சேலத்தில் உள்ள ‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா‘ (பிஎப்ஐ)அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி அளிப்பதாக பிஎப்ஐ அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிா்வாகிகள் இல்லங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 22-ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினா். சென்னை, மதுரை, தேனி, திண்டுக்கல் உள்பட மாவட்டங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பிஎப்ஐ அமைப்பை சோ்ந்த நிா்வாகிகள் 11 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும் இந்த அமைப்புக்கும், இதன் துணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்து கடந்த 27-ந்தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்திலும் இந்த அமைப்புக்கு தடை விதித்து தமிழக அரசின் தலைமை செயலாளா் வெ.இறையன்பு அரசாணை பிறப்பித்தாா்.

முன்னதாக இந்த அமைப்புக்கு சொந்தமான இடங்களில் சோதனையை நடைபெற்றதை கண்டித்து, பல்வேறு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. எனவே இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசாா் உஷாா்ப்படுத்தப்பட்டனா்.

‘சீல்‘ வைப்பு:

மத்திய அரசின் தடை உத்தரவையடுத்து இந்த அமைப்பின் அலுவலகங்கள், துணை அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைமை அலுவலகத்துக்கு மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை காலை சீல் வைத்தனா். அப்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் தொடா்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சேலத்தில்….

இதே போல் சேலம், கோட்டை பகுதியில் செயல்பட்டு வந்த பி.எஃப்.ஐ. சேலம் மாவட்ட தலைமை அலுவலகத்தை காவல் உதவி ஆணையா் வெங்கடேசன், வட்டாட்சியா் செம்மலை ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்து, அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனா்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/oct/02/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-3925824.html