தாய்லாந்தில் இருந்து மீட்ட 13 பேர் சென்னை பயணம் – கடைசி நேர பரபரப்பு – BBC Tamil

சென்னைச் செய்திகள்

தாய்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்டு டெல்லி விமான நிலையத்துக்கு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேரை இன்று (அக்டோபர் 4) இரவு 11 மணிக்கு சென்னைக்கு புறப்படும் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தில் இருந்து இன்று பகல் 12.20 மணிக்கு இண்டிகோ விமானத்தில் புறப்பட்ட 13 பேரும் பிற்பகல் 3 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தனர். 13 பேரிடம் விசாரணை நடத்துவதற்காக இந்திய குடிவரவுத்துறை அலுவலகத்துக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து மாலை 5.30 மணியளவில் சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் அவர்களால் செல்ல முடியவில்லை.

பிற்பகல் 3.30 மணிக்கு குடிவரவுத்துறை அலுவலகத்துக்கு சென்ற அவர்களிடம் இரவு 8 மணிவரை அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. நாடு கடத்தப்பட்டு தாயகம் வந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறையில் அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த 13 பேரையும் தாய்லாந்தில் இருந்து அழைத்து வருவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேரும் குடிவரவுத்துறை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் சென்னை விமானத்தை தவற விட்ட தகவல் தொடர்பாக மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை தமிழ்நாடு அழைத்து வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் அலுவலக உத்தரவின்பேரில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அதிகாரிகள் குழு விமான நிலையத்துக்கு சென்று குடிவரவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு பிறகு டெல்லி விமான நிலைய குடிவரவுத்துறை விசாரணை அதிகாரிகளால் 13 பேரின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அதன் பிறகு அவர்கள் சென்னைக்கு புறப்பட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உதவியுடன் இரவு 11 மணிக்கு புறப்படும் விமானத்தில் 13 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

தாய்லாந்து தடுப்பு முகாமில் இருந்த தமிழர்கள்

வெளிநாட்டு வேலைக்காக முகவர்கள் உதவியுடன் துபாய் சென்ற 13 தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 16 பேர், துபாயிலிருந்து தாய்லாந்து வழியாக மியான்மருக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மியான்மரில் இருந்து தப்பித்து தாய்லாந்து திரும்பியபோது அந்நாட்டு ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் பாங்காக்கில் உள்ள தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு என ஆன்லைனில் வெளிவந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்து பலர் அந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளனர். பிறகு அவர்கள் ஓர் உள்ளூர் முகவரின் தொடர்பில் இணைக்கப்பட்டனர். அந்த முகவர் மூலமாக இவர்கள் துபாய்க்கு சென்றபோது பல இந்தியர்கள் அங்கு வேலைக்காக வந்திருந்தனர். துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் என்ற இடத்தில் ஏராளமான நிறுவனங்கள் வேலைக்காக ஆட்களைத் தேர்வுசெய்து கொண்டிருந்தன. அங்கு சில நிறுவனங்கள் வித்தியாசமான முறையில் சிலரைத் தேர்வுசெய்தன.

அப்படித் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் தாய்லாந்தில்தான் அவர்களுக்கு வேலை எனச் சொல்லப்பட்டது. ஏற்கெனவே சொந்த ஊரில் மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்து, வெளிநாடுவரை வந்து விட்டதால் கிடைத்த வேலையில் சேருவதென்று தீர்மானித்த அவர்கள், தாய்லாந்து வேலைக்கு ஒப்புக்கொண்டனர்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

மியான்மருக்கு சட்டவிரோத ஆள் கடத்தல்

இவர்கள் தாய்லாந்து சென்ற பிறகு, அங்குள்ள உள்ளூர் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த முகவர்கள் குழுவுக்கு ஒரு பெண் தலைவர் இருந்தார். அவர் பாங்காக் விமான நிலையத்தில் இருந்து சுமார் 500 கி.மீ தூரமுள்ள எல்லை பகுதிக்கு இவர்களை அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து இவர்களுடைய கடவுச் சீட்டு, விசா ஆவணங்கள் அனைத்தையும் அந்த முகவர்கள் வாங்கிக் கொண்டனர். அந்த இடத்தில் ஓர் ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதைக் கடந்துதான் அலுவலகம் செல்ல வேண்டும் என்பதால் அவர்களுடைய செல்போனும் வாங்கிக்கொள்ளப்பட்டது.

டெல்லி விமான நிலையத்தில் தமிழக இளைஞர்கள்

மறுநாள் காலையில் அவர்களிடம் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர்களில் சிலர் தங்கள் இருப்பிடத்தை ஜிபிஎஸ் மூலம் ஆராய்ந்தபோது, தாங்கள் தாய்லாந்தில் இல்லை என்பதும் மாறாக மியான்மரில் இருப்பதும் தெரிந்தது.

அடுத்த நாள் காலையில் கட்டுமான நிலையில் இருந்த ஒரு பெரிய நிறுவனத்துக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து கொண்டிருந்தனர். லேட்டஸ்ட் ஐபோன்கள், கணிப்பொறிகள் போன்ற அனைத்து வசதிகளும் அங்கு இருந்தன.

அங்கிருந்தவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள், சிலர் பி.காம், பிபிஏ, டிப்ளோமா போன்ற படிப்பை முடித்தவர்களாக இருந்தனர். ஆனால், ‘எல்லோருக்குமே ஒரே மாதிரியான வேலைதான்’ என்று அந்த தனியார் நிறுவனத்தார் கூறினர். பிறகு, சில வாடிக்கையாளர்களின் தகவல்கள் வழங்கப்பட்டன.

அந்த வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதுதான் இவர்களுடைய பணி என்று சொல்லப்பட்டது. சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

மோசடி வேலைக்கு கட்டாயப்படுத்திய குழுக்கள்

மியான்மர் நிறுவனம், ஒவ்வொரு ஊழியரும் எத்தனை டாலர்கள் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்ததாக சிக்கிக்கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

முதல் ஒரு வாரத்துக்கு மூன்று வேலை உணவும், நல்ல வசதியும் கொடுத்து உபசரித்ததாகவும் ஆனால், நாட்கள் செல்லச் செல்ல உரிய இலக்கை எட்டாதவர்களுக்கு உணவு அளவை குறைத்தும் தரக்குறைவாக நடத்தியும் அடித்தும் துன்புறுத்தினர் என்றும் அந்த இளைஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். பல நேரங்களில் துப்பாக்கி முனையில் இலக்குகளை எட்ட தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த இளைஞர்களுள் சிலர், பணி நேரத்துக்கு பிறகு வெளியே சென்று வந்த வேளையில், உள்ளூர் ராணுவ அதிகாரியின் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் தங்களுடைய நிலை குறித்து கூறியுள்ளனர். இந்த தகவல் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு தெரியவரவே அதன் நிர்வாகிகள் 16 பேரின் ஆவணங்களை பறித்துக் கொண்டு வேலையைத் தொடரும்படி துப்பாக்கி முனையில் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

வாடிக்கையாளர்களிடம் இருந்து கிரிப்டோ முதலீடுகளை பெறுவதுதான் இவர்களுடைய பணி என்று அவர்களிடம் சொல்லப்பட்டது

சுமார் ஒரு மாதமாக பணியாற்றிய இவர்கள், சம்பளம் வாங்க வேண்டிய நேரத்தில், இந்த இளைஞர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் ராணுவமும், எல்லைப் படையினரும் சோதனை நடத்தி 16 பேரை மீட்டுள்ளனர். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்காமல் மீட்கப்பட்ட அனைவரையும் தாய்லாந்தை இணைக்கும் ஆற்றுப் பகுதிக்கே கொண்டு வந்து மியான்மர் ராணுவத்தினர் விட்டுச் சென்றுள்ளனர்.

இதற்குப் பிறகு எல்லை கடந்து சென்றவர்களை தாய்லாந்து அரசு பிடித்து, ஒரு தடுப்பு முகாமில் வைத்தது. அங்கிருந்து தங்களை மீட்க தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்துத் தெரியவந்ததும், இவர்களை மீட்க உதவும்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் மியான்மரில் சிக்கியவர்களில் 13 பேர் தமிழர்கள் என்றும் அவர்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்பில் உள்ளதாகவும் அவர்கள் தங்களை விரைவாக மீட்க அரசின் உதவியை நாடுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிறகு இந்த விவகாரத்தில் வெளியுறவுத் துறை தலையிட்ட நிலையில், தடுப்பு முகாமில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 13 தமிழர்களும் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இண்டிகோ விமானம் மூலமாக இன்று இரவு டெல்லி வழியாக சென்னை திரும்புவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவப்புக் கோடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: https://www.bbc.com/tamil/global-63127920