சென்னை: பழுது பார்க்கும் வேலையின் போது ஏசி வெடித்து சிதறியதில் இருவர் பலி.! – Puthiya Thalaimurai

சென்னைச் செய்திகள்

சென்னை ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்தில் ஏசி பழுது பார்த்த போது திடீரென ஏசி வெடித்த விபத்தில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில், ஜாஸ் சினிமாஸ் பிரைவேட் லிமிட்டெட் அலுவலகத்தின் மாடியில் ஏசி பழுதடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி ஏசி அவுட்டோர் கம்ரஸர் சர்வீஸ் செய்து கொண்டிருந்த போது ஒரு யூனிட் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில், சர்வீஸ் செய்து கொண்டிருந்த சின்னதுரை(48), இந்திரகுமார்(22), சரவணன்(42), ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு மூவரும் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர்.

அதன் பின்னர் சரவணன் தவிர்த்து மற்ற இருவரும் கே.எம்.சி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சையில் இருந்த இந்திரகுமார் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று சின்னதுரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

image

சம்பவம் தொடர்பாக பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Source: https://www.puthiyathalaimurai.com/newsview/148652/Chennai–Two-people-died-when-the-AC-exploded-during-the-repair-work-