சென்னை மழைவெள்ளத்தை சமாளிக்க 741 மோட்டார் பம்புசெட்டுகள் தயார்! அமைச்சர் நேரு – patrikai.com

சென்னைச் செய்திகள்

சென்னை: வடடகிழக்கு பருவமழையால் சென்னையில் ஏற்படும் மழைவெள்ளத்தை  எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்குவதை தடுக்கவே, 4000 கோடியில் சென்னை மாநகரம்  முழுவதும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்தாலும், இன்னும் பல்வேறு இடஙக்ளில் அதன் இணைப்பு கொடுக்காமல் இருக்கிறது. இதில் முதற்கட்டமாக தொடங்கப்பட்ட பணிகள் வரும் 10ந்தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மற்ற கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தொடங்க உள்ள பருவமழை காலத்தில் சென்னை மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகஅரசும், மாநகராட்சியும் கடந்த ஆண்டுபோல, சென்னை வெள்ளத்தில் மிதக்காது என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில்,  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அடிக்கல் நாட்டும் பணியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர் ஐடிரீம்ஸ் மூர்த்தி, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு,  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் 1989ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் அடுத்த வந்த ஆட்சியாளர்கள் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  ரூ.13.40 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

தொடர்ந்து பேசியவர், சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடியாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுக்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது என்றும்  அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

அதன்படி, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்காமல் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, சுமார் 719 மின் மோட்டார்கள் தற்போதே அந்ததந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மற்றவை அவசர தேவைக்காக தயாராக வைக்கப்பட்டு உள்ளது.

Source: https://patrikai.com/741-motor-pump-sets-are-ready-to-deal-for-rain-flood-in-chennai-minister-nehru/