அதிகரிக்கும் நெரிசல்: சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

கோப்புப்படம்

தீபாவளியையொட்டி சென்னை தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதால் இன்று(அக்.8) முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருள்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் வட்டார பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டு பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும்  இன்று(அக்.8) முதல் அக்டோபர் 24 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தேவைக்கேற்ப ஆட்டோக்களின் இயக்கமானது தியாகயாய சாலை, தணிகாசலம் சாலைச் சந்திப்பிலிருந்தும், ரோகிணி சிக்னல் சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை, கோட்ஸ் சாலை சந்திப்பிலிருந்தும், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மகாராஜபுரம் சந்தானம் சாலை சந்திப்பிலிருந்தும், பிருந்தாவன் சந்திப்பிலிருந்தும் மற்றும் கண்ணம்மாபேட்டை சந்திப்பிலிருந்தும் பனகல் பூங்கா நோக்கிச் செல்லத் தடை செய்யப்படும்.

இதையும் படிக்க: பிரதமர் மோடி நாளை(அக்.9) குஜராத் செல்கிறார்!

சரக்கு மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் தி.நகர் பகுதிக்குள் வியாபார நேரத்தில் செல்லத் தடை செய்யப்படும். இத்தைகைய வாகனங்கள் இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை தி.நகர் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/oct/08/increasing-congestion-traffic-changes-in-chennai-city-3928873.html