சென்னை விரிவாக்கப்படுகிறதா? முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 

சென்னை பெருநகரப் பகுதியை, மத்தியப் பகுதி, வடக்கு, தெற்கு என்ற மூன்றாகப் பிரிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

சென்னை பெருநகரப் பகுதி தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள நிலையில், சென்னை பெருநகரப் பகுதியை மறுசீரமைக்கவும், நகரின் பெருநகரப் பகுதியை 5,904 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர விரிவாக்கம் குறித்து விரைவில் தமிழக அரசு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் அமுதா  உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

இதையும் படிக்க | மூன்றாகப் பிரிகிறது சென்னைப் பெருநகரம்?

Source: https://www.dinamani.com/tamilnadu/2022/oct/11/chennai-corporation-expansion-meeting-3930582.html