சென்னை: ரெயில்முன் தள்ளி மாணவி படுகொலை – வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர் – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை,

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.

சத்தியப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார். சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது.இவர்களது காதலுக்கு சத்தியப்பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை புரிந்துகொண்ட சத்தியப்பிரியா, சதீஷை விட்டு விலக தொடங்கினார். இருந்தபோதிலும் தனது காதலில் உறுதியாக இருந்த சதீஷ், சத்தியப்பிரியாவை பின்தொடர்ந்து வந்தார்.

இந்நி்லையில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு தனது தோழியுடன் சத்தியப்பிரியா, பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அவர் ரெயிலுக்காக காந்திருந்தபோது, அங்கு சதீஷ் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது சதீஷ், சத்தியப் பிரியாவிடம் பேச முயன்றார். ஆனால், அவர் பேசுவதை தவிர்த்து வந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே தகராறு உச்சகட்டத்தில் இருந்த போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. சத்தியப்பிரியாவும், அவரது தோழியும் ரெயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர்.

அப்போது திடீரென சதீஷ், சத்தியப்பிரியாவை ஓடும் ரெயில் முன்பு தள்ளினார். அப்போது ரெயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்தியபிரியா தண்டவாளத்தில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத என்ஜீன் டிரைவர், உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றார். இருந்த போதிலும் ரெயில் சக்கரம் சத்தியப்பிரியா மீது ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சத்தியப்பிரியா உயிரிழந்தார்.

சத்தியப்பிரியாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன், சப்-இன்ஸ்பெக்டர் குமுதா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தப்பி ஓடிய சதீஷை பிடிக்க பரங்கிமலை உதவி போலீஸ் கமிஷனர் அமீர் அகமது, மடிப்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் ரூபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை, சிறப்பு போலீசார் தலைமையில் 3 தனிப்படை என 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் தப்பியோடிய சதீஸ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Source: https://www.dailythanthi.com/News/State/chennai-pushing-the-girl-in-front-of-the-train-to-kill-the-youth-was-arrested-by-the-special-forces-police-814206