சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்கம்: முதல்வர் ஒப்புதலை தொடர்ந்து விரைவில் அரசாணை – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்(சிஎம்டிஏ) எல்லை விரிவாக்கம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கட்டிடங்கள், மனைப் பிரிவுகளுக்கான அனுமதியை, உள்ளாட்சி அமைப்புகள், நகர மற்றும் ஊரமைப்பு இயக்ககம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவை வழங்கி வருகின்றன. இதில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லையானது சென்னை மாவட்டம் தவிர்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1,189 சதுர கிமீ அளவுக்கு உள்ளது. இந்த எல்லைக்குள் கட்டிடம், மனைப்பிரிவு அனுமதிகளை சிஎம்டிஏ-விடம் தான் பெற வேண்டும்.

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிர்வாக எல்லை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப் பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில் சென்னைபெருநகர திட்டத்தின் கீழ், கூடுதலாக திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள 532 கிராமங்கள், வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் 69, நெமிலியில் 77 கிராமங்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், பெரும்புதூர், செங்கல்பட்டு, திருப்போரூர், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர் ஆகிய9 தாலுகாக்களின் கிராமங்களையும் சேர்த்து 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது திமுக ஆட்சியில் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக சிஎம்டிஏ ஏற்கெனவே வரைவு திட்டத்தைத் தயாரித்து, அமைச்சர் ஒப்புதலைப் பெற்றிருந்தது. இதையடுத்து கடந்த அக்.11-ம் தேதி தலைமைச் செயலகத்தில் சிஎம்டிஏ எல்லை விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எல்லையை எவ்வளவு தூரம் விரிவாக்கம் செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விரிவாக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, 8,878 சதுர கிமீக்குபதில் 5,904 சதுர கிமீ அளவுக்குவிரிவாக்கம் செய்ய முடிவெடுத்து,அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக வீட்டுவசதித் துறை தரப்பில் கூறப்படுகிறது. இதன்மூலம், அரக்கோணத்தின் ஒரு பகுதி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகளவில் விவசாய நிலங்கள் வரும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளைசிஎம்டிஏ எல்லைக்குள் கொண்டுவரமுடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/883082-chennai-metropolitan-development-corporation-boundary-extension.html