சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உலக விபத்து காய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

சென்னை

உலகம் முழுவதும் அக்டோபர் 17-ந் தேதி உலக விபத்து காய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறையின் சார்பில் உலக விபத்து காய தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் மணி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தீயணைப்பு துறையினர் சார்பில் பாதுகாப்புஒத்திகைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகையை தீ விபத்தில்லாத பண்டிகையாக கொண்டாட வலியுறுத்தி ஆஸ்பத்திரி வளாகத்தில் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விபத்து ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு கையாள்வது? முதல் உதவி சிகிச்சை எப்படி அளிக்க வேண்டும்? என்பது குறித்து மயிலாப்பூர் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் செய்து காட்டினர்.

இது குறித்து ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் இயக்குனர் மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் மணி கூறியதாவது:-

விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காவும், காயங்களை குறைப்பதற்காகவும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக விபத்து காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. விபத்துகள் எப்படி நிகழும் என்று நம்மால் கணிக்க முடியாது. சில நேரங்களில் வீட்டில் உள்ள பொருட்கள் கூட விபத்துகளை ஏற்படுத்தும்.

வாகனத்தில் பயணிக்கும் போது கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலைகளில் விபத்து நடந்தால் உடனடியாக 108 என்ற எண் மூலம் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கவேண்டும். விபத்து ஏற்பட்ட அடுத்த ஒரு மணி நேரம் ‘கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும். அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக விபத்தில் சிக்கிய நபருக்கு முதலுதவி அளித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :

Source: https://www.dailythanthi.com/News/State/world-accident-injuries-day-awareness-program-at-rayapetta-government-hospital-chennai-817297