நெருங்கும் பருவமழை: 4916 பள்ளங்களில் 770-ஐ மட்டுமே சீரமைத்துள்ள சென்னை மாநகராட்சி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சாலைகளில் கண்டறியப்பட்டுள்ள 4,916 பள்ளங்களில் 770-ஐ மட்டும் சென்னை மாநகராட்சி தற்போது வரை சீரமைத்துள்ளது.

சென்னை மாநகராட்சி விரைவில் துவங்க உள்ள வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள் மாற்றும் பணி, குடிநீர் வாரிய பணிகளால் சேதமடைந்த சாலைகளின் பகுதி சீரமைப்பு என்ற அடிப்படையில், ‘பேட்ஜ் வொர்க்’ பணி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி சென்னையில், பல்வேறு பணிகளால் 1,792 சாலைகளில் 4,916 இடங்கள் சேதமடைந்துளளன. இதன் மொத்த பரப்பளவு 85, 463 சதுர அடி. இவற்றில், ‘பேட்ஜ் வொர்க்’ செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, வார்டு வாரியாக தலா ரூ.5 லட்சம் என ரூ.10 கோடி நிதியை சென்னை மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

பேட்ச் வொர்க் பணி செய்யும்போது, சாலையை திடப்படுத்தி, ஜல்லி மீது சிமனெ்ட் கலவை போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பேட்ஜ் வொர்க் செய்த பகுதி சாலை மட்டத்தில் இருக்க வேண்டும். அங்கு பள்ளம் ஏற்படாத வகையில் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது வரை 770 பள்ளங்கள் என 3,827 சதுர அடி பரப்பளவு சரிசெய்யப்பட்டுள்ளது.

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/884779-chennai-corporation-has-repaired-only-770-out-of-4916-potholes.html