சாலையில் திரிந்த 244 மாடுகள் பிடிபட்டன உரிமையாளர்களுக்கு ரூ.5 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி அதிரடி – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றி திரிந்த 244 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.4,88,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 12ம்தேதி முதல் 18ம்தேதி வரை சுற்றித் திரிந்த 244 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.4,88,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDgzNzXSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwODM3NS9hbXA?oc=5