சென்னை வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் திருக்குளம் ரூ.1.70 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை, வளசரவாக்கம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் ரூ.1.70 கோடி செலவில் திருக்குளம் மேம்பாடு செய்யப்படும் என  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலின்படி, சென்னை, வளசரவாக்கம், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயில் திருக்குளப் பணிகளை இன்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை, வளசரவாக்கம், அருள்மிகு அகஸ்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலுக்கு அதன் அருகிலேயே 186 சென்ட் பரப்பளவில் திருக்குளம் அமைந்துள்ளது. இத்திருக்குளமானது சென்னை பெருநகர மாநகராட்சியின் மூலம் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் இன்று  நேரில் ஆய்வு செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேல்வீஸ்வரர் திருக்கோயிலின் திருக்குளம் சம்பந்தமான வரப்பெற்ற புகாரைத் தொடர்ந்து கடந்த சூலை மாதம் இத்திருக்கோவிலுக்கு நேரடியாக வருகை தந்து சட்டமன்ற உறுப்பினர், மாநகராட்சி  பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு செய்தோம். தற்போது இந்த திருக்குளத்தின் பணிகள் ரூ.1.50 கோடியிலிருந்து ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் அளவிற்கு நிதி உயர்த்தப்பட்டு, குளத்தின் நீர்த்தேக்க அளவு குறையாமல், குளத்தின் மொத்த பரப்பளவையும் பயன்படுத்துகின்ற வகையிலும், அதனைச் சுற்றி நடைபாதை, பூத்துக் குலுங்கும் தெய்வத்திற்கு உகந்த பூக்கள்  தரும் செடிகளையும் அமைத்து  சிறப்பான எழில் நயத்தோடு உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.  

 தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று,  சென்னை மாநகராட்சி மூலமாகவே இந்த குளத்தை அமைப்பதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றோம். அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோயிலுக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கின்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் இந்த திருக்கோவிலில் திருப்பணிகளையும் மேற்கொள்வதற்கு ஏற்றார்போல் முதல் கட்டமாக மண்டல குழு, மாநில குழுவினுடைய ஒப்புதல் பெறப்பட்டிருக்கின்றது. சன்னிதானத்தை சுற்றி வருகின்ற பகுதி குறுகலாக இருக்கின்ற இடங்களில் அகலப்படுத்துவதற்கு மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் கபாலி குருக்கள், ராஜா குருக்கள் ஆகியோரிடம் ஆலோசனை பெற்று சன்னிதானத்தை விரிவு படுத்துகின்ற முயற்சியை மேற்கொண்டு இருக்கின்றோம்.

இதில் குளத்தை சுற்றி கோபுரம் அமைத்தல், குளத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துகின்ற வண்ணம் மூலவர் சன்னதிக்கு முன்புறமுள்ள பாழடைந்த கற்காறை மண்டபத்தை நீக்கி, கருங்கல் மண்டபமாக மாற்றி அமைத்தல், சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுதல்  போன்றவற்றிக்கு  திட்ட மதிப்பு தயாராக உள்ளது,  
இத்திருகோயிலுக்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதியில் பக்தர்கள் எடுத்து வைத்ததற்கு இணங்க ராஜகோபுரம் கட்டுகின்ற பணியையும் துவக்க இருக்கின்றோம் திருக்கோயில் வளாகத்தை சுற்றி கற்கள் கற்தள பாதையை அமைக்க இருக்கின்றோம். சிறு சிறு மராமத்துப் பணிகள் இருந்தால் அதனையும்  மேற்ககொண்டு, அனைத்து சன்னதிகளும் வர்ணங்கள் பூசப்பட்டு ரூபாய் 75 லட்சம் செலவில்திருப்பணிகள் நடத்த உள்ளோம்.  

மேலும் கூடுதலாக நிதி தேவைப்பட்டாலும் வழங்கிட தயாராக உள்ளோம்.  உபயதாரர்கள் முன் வந்து பணிகள் செய்திட வரவேற்கப்படுகிறார்கள். இன்றும் இரண்டு மாத காலத்திற்குள் திருப்பணிகளுக்கு உண்டான பணிகளை தொடங்கி ஓராண்டுக்குள் திருப்பணிகளை முழுமை பெற்று குடமுழுக்கு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அன்பர்களும் சான்றோர்களும் பக்தர்களும் இதற்கு பேருதவியாக இருந்து முழு ஒத்துழைப்பை தந்து இந்த திருக்கோவிலுக்கு வருகின்ற பக்தர்கள் இலகுவாக சிரமமின்றி மகிழ்ச்சியாக இறை தரிசனம் செய்வதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவோம் என்ற உறுதியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
        
இந்த ஆய்வின்போது, மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் திரு. கணபதி, பெருநகர சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் (பணிகள்) திரு. எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப., மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் திரு. வே.ராஜன்,  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திருமதி ரேணுகாதேவி, மண்டல உதவி  ஆணையர் திரு. சுகுமார், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் திருமதி பாரதி, திருமதி செல்வி ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDk3MDHSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwOTcwMS9hbXA?oc=5