சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக திமுக கவுன்சிலர் அமுதா தேர்வு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக திமுக கவுன்சிலர் அமுதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை(செனட்) உறுப்பினரை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடந்தது. தேர்தலை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரை தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

இந்த பதவிக்கான தேர்தல் இப்போது நடைபெறுகிறது. இந்த பதவிக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை தாக்கல் செய்பவர்களின் மனுவை ஒரு கவுன்சிலர் முன்ெமாழிய வேண்டும், ஒரு கவுன்சிலர் வழி மொழிய வேண்டும்’ என்றார். அதைத் தொடர்ந்து, செனட் உறுப்பினர் பதவிக்கு சென்னை மாநகராட்சி 68வது வார்டு திமுக கவுன்சிலர் பி.அமுதா வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அமுதாவை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து அமுதா போட்டியின்றி செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ககன்தீப் சிங் பேடி அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ெசனட் உறுப்பினர் பதவிக்கான சான்றிதழை ககன்தீப் சிங் பேடி வழங்கினார். இதைத் தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் அமுதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MDk3NzfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgwOTc3Ny9hbXA?oc=5