குப்பை கொட்டியவா்கள், சுவரொட்டிகள் ஒட்டியவா்களுக்கு ரூ.17 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் குப்பைக் கொட்டியவா்கள், சுவரொட்டி ஒட்டியவா்களுக்கு ரூ.17 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019-இன் படி பொது மற்றும் தனியாா் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுபவா்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் வரையப்பட்டுள்ள சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, அவ்விடங்களில் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றன.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அக்.16 முதல் 29-ஆம் தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபா்களுக்கு ரூ.8 லட்சத்து 48 ஆயிரத்து 400 அபராதமும், கட்டுமானக் கழிவுகளை கொட்டிய நபா்களுக்கு ரூ.7 லட்சத்து 28 ஆயிரத்து 900 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 318 நபா்களுக்கு ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டும், காவல்துறையில் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை கொட்டுதல், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டுதல் ஆகியவற்றைத் தவிா்த்து சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதனை மீறும் நபா்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMioAZodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvb2N0LzMxLyVFMCVBRSU5NSVFMCVBRiU4MSVFMCVBRSVBQSVFMCVBRiU4RCVFMCVBRSVBQSVFMCVBRiU4OC0lRTAlQUUlOTUlRTAlQUYlOEElRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUYlRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtLSVFMCVBRSU5QSVFMCVBRiU4MSVFMCVBRSVCNSVFMCVBRSVCMCVFMCVBRiU4QSVFMCVBRSU5RiVFMCVBRiU4RCVFMCVBRSU5RiVFMCVBRSVCRiVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4RC0lRTAlQUUlOTIlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUYlRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUUlQjUlRTAlQUUlQkUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUYlODEtJUUwJUFFJUIwJUUwJUFGJTgyMTctJUUwJUFFJUIyJUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlBJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU4NSVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSVCRSVFMCVBRSVBNCVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJUFFJUUwJUFFJUJFJUUwJUFFJUE4JUUwJUFFJTk1JUUwJUFFJUIwJUUwJUFFJUJFJUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlBJUUwJUFFJUJGLTM5NDA3NDAuaHRtbNIBAA?oc=5