சென்னையில் சில இடங்களில் மழைநீர் வடிய தாமதம் ஆவது ஏன்? – தலைமைப் பொறியாளர் விளக்கம் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் ஒரு சில இடங்களில் மழைநீர் வடிய தாமதம் ஆவது குறித்து என்று தலைமைப் பொறியாளர் ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், வட சென்னையின் ஒரு சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில், “சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்கள் 7 செ.மீ., நீரை உள்வாங்கும் திறன் கொண்டது. அதைவிட அதிகளவு செ.மீ. மழை பெய்தால், மழைநீர் வடிய இரண்டு மணி நேரமாவது தேவைப்படுகிறது. புதிதாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால்களில் மழைநீர் சீராக செல்கிறது.

சில பிரதான சாலைகள், உட்புற சாலைகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் உள்ளது. அந்தப் பகுதிகளில் நீர் கடைசியாக சென்று சேரக்கூடிய நீர்நிலைகளில், நீர் உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அந்த இடங்களில் எல்லாம் மோட்டார் பம்புகள் வாயிலாக மழைநீர் அகற்றும் பணி நடந்து வருகிறது.

தற்போது அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பலர் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பழைய சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு தலா பத்து பணியாளர்கள், விரிவாக்கப்பட்ட வார்டுகளில் தலா ஐந்து பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மழைக்காலம் முடியும் வரை, மழைநீர் வெளியேற்றும் பணிகளில் ஈடுபடுவர்.

அதேபோல், தற்போது பெய்து வரும் மழை நின்றவுடன், மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகளில் அவசர காலம் கருதி உடனடியாக துார்வாரப்படும். அப்போதுதான், அடுத்து வரும் மழைக்கு, மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvODkxMjE4LXdoeS1kZWxheS1pbi1yYWlud2F0ZXItZHJhaW5pbmctaW4tc29tZS1wbGFjZXMtaW4tY2hlbm5haS5odG1s0gEA?oc=5