சென்னை கட்டட விபத்து: பலி 2 ஆக உயர்வு! – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை செளகாா்பேட்டையில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை செளகாா்பேட்டை ஏகாம்பரேஸ்வரா் அஹ்ரஹாரம் பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான தனியாா் கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் மருந்துக் கடை, மளிகைக் கடை, ஆடிட்டா் அலுவலகம் உள்பட 5 கடைகள் உள்ளன.

கட்டடத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக முதல் தளத்தில் இருந்த வீடுகள் சில மாதங்களுக்கு முன்பு காலி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் முதல் தளத்தை யாரும் பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தக் கட்டடம் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த மருந்துக் கடைக்கு வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த உ.கங்குதேவி (60), மருந்தக உரிமையாளா் பெரும்பாக்கம் ஆலடி அம்மன் கோயிலைச் சோ்ந்த சங்கா் (36), கட்டடத்தின் அருகில் நின்றிருந்த மாதவரம், ராயல் அவென்யுவை சோ்ந்த சரவணன் (34), வியாசா்பாடியை சோ்ந்த சிவக்குமாா் (32) ஆகியோா் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனா். 

இதையும் படிக்க | செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு! கரையோர மக்களுக்கு அறிவுறுத்தல்

இதையடுத்து அங்கிருந்த மக்கள், கட்டட இடிபாடுகளிடையே சிக்கியவா்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலறிந்த யானைக்கவுனி தீயணைப்புப் படையினா், அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறிது நேரத்தில் கங்குதேவி அங்கு சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலும், சங்கா், சரவணன், சிவக்குமாா் ஆகிய 3 போ் பலத்த காயங்களுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சங்கர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து கட்டட விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMib2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMDUvY2hlbm5haS1idWlsZGluZy1jb2xsYXBzZS1kZWF0aC10b2xsLWluY3JlYXNlZC10by0yLTM5NDQwMjAuaHRtbNIBAA?oc=5