மெட்ராஸ் பார் அசோசியேஷன் விழா நீதித்துறையில் புதிய தொழில்நுட்பம் அவசியம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் ஆளுநர்  ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில்  மெட்ராஸ் பார் அசோசியேஷன் சார்பில் நடந்த  தேசிய மாதிரி நீதிமன்ற போட்டி நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல மாநிலச் சட்டக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது: இளம் வக்கீல்கள் தங்களது திறமையை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் புதிய வளர்ச்சிக்கு ஏற்றார் போல நீதித்துறை மாற்றம் அடைய வேண்டும். புதிய தொழில் நுட்பங்களை  பயன்படுத்தி நீதி பரிபாலனத்தை எளிமையாக்க வேண்டும். நீதித்துறையில் முன்னேற்றத்துக்கான வழியை காண வேண்டும். நீதித்துறையில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதில் இளம் வக்கீல்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, விழாவில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசும்போது, நீதிமன்றம், வக்கீல் சங்கம் ஆகியவை இருசக்கரம் போன்றது. இதில் ஒரு சக்கரம் பழுதானாலும் இயங்காது. இளம் வக்கீல்கள் தங்களது வழக்கிற்காக ஆஜராவதற்கு முன்னதாக அந்த வழக்கு குறித்து அத்தனை விஷயங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTIwOTDSAQA?oc=5