சென்னை மற்றும் தமிழகத்தில் நவ10,11-ம் தேதி கனமழை எச்சரிக்கை: – Dhinasari Tamil – Dhinasari Tamil

சென்னைச் செய்திகள்

வரும் 11-ம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி வேண்டுகோளை ஏற்று சென்னை, புறநகர் ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நீர்வள ஆதாரத் துறை ஈடுபட்டுள்ளது. வங்கக் கடலில் இலங்கையை ஒட்டி நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9, 10 தேதிகளில் மிதமான மழையும், 11-ம் தேதி கனமழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நவ.10இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 11 இல் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யவாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு சென்னை,புறநகர் பகுதிகளிலிருந்து வெளியேறிய நீரால் பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில்உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி சார்பில் நீர்வள ஆதாரத் துறைக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மட்டுமல்லாது, மாநகரப் பகுதிக்குள் உள்ள கொரட்டூர், மாதவரம், கொளத்தூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் போன்றபெரிய ஏரிகளில் நீர் அளவையும் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை நீர்வள ஆதாரத் துறை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீர்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டில் உள்ள புழல் ஏரியில் நேற்று நீர் வரத்து 165 கன அடியாக இருந்த நிலையில் 292 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து 42 கன அடியாக இருந்த நிலையில் 713 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பூண்டி ஏரியிலிருந்தும் 53 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாநகரத்துக்குள் இருக்கும் ஏரிகளின் நீர்மட்டத்தையும் ஆராய்ந்து, எவ்வளவு நீரை வெளியேற்றலாம் எனப் பொறியாளர்கள் நேரில்ஆய்வு செய்து நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMi9gFodHRwczovL2RoaW5hc2FyaS5jb20vbGF0ZXN0LW5ld3MvMjY5NzI2LSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUUlQjElRTAlQUYlOEQlRTAlQUUlQjElRTAlQUYlODElRTAlQUUlQUUlRTAlQUYlOEQtJUUwJUFFJUE0JUUwJUFFJUFFJUUwJUFFJUJGJUUwJUFFJUI0JUUwJUFFJTk1JUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGLmh0bWzSAQA?oc=5