நீா்நிலைகளில் 1.19 லட்சம் கிலோ கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை நகரில் மழை நீா் தேங்காத வகையில் நீா் நிலைகள், வடிகால் பகுதிகளில் 1.19 லட்சம் கிலோ திடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் அவ்வப்போது பெய்த கனமழையால், வடசென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கின. உள்புற சாலைகளில் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. குறிப்பாக, முதல்வா் ஸ்டானினின் கொளத்தூா் தொகுதியிலும், சென்னை மாநகராட்சி மேயா் பிரியாவின் 74-ஆவது வாா்டு பகுதியிலும் மழைநீா் அதிக அளவு தேங்கியது. அதேபோன்று, திருவிக நகா் மண்டலத்தில் புளியந்தோப்பு, பட்டாளம் உள்ளிட்ட பகுதி மக்களும் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனா்.

இப்பகுதிகளில் அமைச்சா்கள் நேரு, சேகா்பாபு, சுப்பிரமணியன் ஆகியோா் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சென்னையில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள், வண்டல் வடிக்கட்டி தொட்டிகளை சுத்தப்படுத்துதல், நீா்நிலைகளைத் தூா்வாருதல், சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றுதல், சாலைகளில் ஏற்பட்டு சிறு பள்ளங்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டாா்.

அதன்படி, சென்னை மாநகராட்சி பணியாளா்கள் முதல் பணியாக போக்குவரத்துக்கு இடையூறாகவும், ஆபத்தான நிலையிலும் இருந்த 1,018 மரங்களின் கிளைகளை அகற்றினா்.

மேலும், 344 நீா்நிலைகளில் இருந்து 1.19 லட்சம் கிலோ கழிவுகளை அகற்றினா். புதிதாக 1,969 வண்டல் வடிக்கட்டி தொட்டிகள் அமைக்கப்பட்டதுடன், 20,0 89 வடிக்கட்டி தொட்டிகளில் ஏற்பட்டிருந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளா் ராஜேந்திரன் கூறியதாவது:

சென்னையில் மழைக்கு பிறகு நீா்நிலைகள் தூா்வாரப்பட்டு உள்ளன. மேலும், கழிவுகள் கடலுக்கு செல்லாமல் இருக்க, நீா்நிலைகளில் வலைகள் அமைத்து அவை அகற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்று தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், அதிக கனமழை பெய்யும்போது நீா்நிலைகளில் நீா்மட்டம் அதிகரித்து, மழைநீா் வடிகால்களில் இருந்து வரும் நீரை உள்வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், சாலைகளில் நீா் தேக்கம் காணப்படுகிறது. ஏரி, குளங்களில் நீா் மட்டத்தைக் குறைக்கும்படி கூறியுள்ளோம் என்றாா் அவா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMimQVodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvbm92LzExLyVFMCVBRSVBOCVFMCVBRiU4MCVFMCVBRSVCRSVFMCVBRiU4RCVFMCVBRSVBOCVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4OCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4RC0xMTktJUUwJUFFJUIyJUUwJUFFJTlGJUUwJUFGJThEJUUwJUFFJTlBJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU5NSVFMCVBRSVCRiVFMCVBRSVCMiVFMCVBRiU4Qi0lRTAlQUUlOTUlRTAlQUUlQjQlRTAlQUUlQkYlRTAlQUUlQjUlRTAlQUYlODElRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJTg1JUUwJUFFJTk1JUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFFJUFFJUUwJUFGJThELSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlQUUlRTAlQUUlQkUlRTAlQUUlQTglRTAlQUUlOTUlRTAlQUUlQjAlRTAlQUUlQkUlRTAlQUUlOUYlRTAlQUYlOEQlRTAlQUUlOUElRTAlQUUlQkYtJUUwJUFFJUE4JUUwJUFFJTlGJUUwJUFFJUI1JUUwJUFFJTlGJUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTg4LTM5NDczNzYuaHRtbNIBAA?oc=5