சென்னை | மழையைக் கடந்து மண வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் | couple who braved rain and got married in chennai today – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொட்டும் வான் மழையை கடந்து மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர் சென்னை மாநகரைச் சேர்ந்த புதுமண தம்பதியர். அவர்களது இந்த செயல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதிவாகி உள்ள மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்தச் சூழலில் மழை காரணமாக ஏற்கெனவே முகூர்த்த தேதி குறிக்கப்பட்டு இன்று நடக்க இருந்த திருமணம் தாமதமானதாக தகவல். சென்னை – புளியந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று ஐந்து திருமணங்கள் நடக்க இருந்தன. ஆனாலும், கோயிலுக்குள் மழைநீர் தேங்கிய காரணத்தால் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருந்தும் கோயிலுக்கு வெளியே காத்திருந்த தம்பதிகள் மழைநீர் சூழ்ந்திருந்த கோயிலுக்குள் வந்து மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். அப்படி கொட்டும் மழையில் குடையுடன் கோயிலுக்கு வந்து திருமணம் செய்து கொண்ட தம்பதியரின் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றும் பணிகளில் சென்னை மாநகராட்சி, குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழைநீரை அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள காரணத்தால் இரண்டு சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy9saWZlLXN0eWxlLzg5NTU3Mi1jb3VwbGUtd2hvLWJyYXZlZC1yYWluLWFuZC1nb3QtbWFycmllZC1pbi1jaGVubmFpLXRvZGF5Lmh0bWzSAQA?oc=5