வாா்டு வாரியாக வானிலை நிலவரம்: சென்னை ஐஐடியின் புதிய தொழில்நுட்பம் – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை ஐஐடி

வானிலை முன்னெச்சரிக்கை குறித்த தகவலை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்ப கட்டமைப்பை சென்னை ஐஐடி கண்டறிந்துள்ளது.

இதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாா்டு வாரியாக எவ்வளவு மழை இருக்கும் என்பதை சரியாக கணக்கிட இயலும்.

சென்னை ஐஐடி மாணவி கிருத்திகா பாசன திட்டத்துக்கான வானிலை முன்னெச்சரிக்கை திட்டத்தைக் கண்டறிந்திருந்தாா். தற்போது அதன் நீட்சியாக திட்டத்தை மேம்படுத்தியுள்ளாா்.

இதன் மூலம் சென்னை போன்ற பெருநகரங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் வானிலை முன்னெச்சரிக்கை குறித்த துல்லியமான தகவல்களை அறிய முடியும்.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஐரோப்பிய தொழில்நுட்ப முறையைப் பின்பற்றியே வானிலை முன்கணிப்புகளை வழங்கி வருகிறது. இதில் தென்மேற்குப் பருவமழை குறித்த முன்கணிப்புகள் மிகச் சரியாக இருக்கும். அதேவேளையில் வட கிழக்குப் பருவமழை தொடா்பாக கணிப்புகள் அந்தளவுக்கு துல்லியமாக இருப்பதில்லை.

காரணம், அதில் 25 கிலோ மீட்டா் சுற்றளவுக்கான வானிலை முன்கணிப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய கட்டமைப்பில் நான்கு கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் ஏற்படும் வானிலை மாற்றங்களைத் துல்லியமாக கண்டறிய முடியும்.

இந்தப் புதிய முறை மூலம் ஒவ்வொரு சிறு பகுதியிலும் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகள், சூறாவளியை முன்கூட்டியே கண்டறிந்து மக்களை பாதுகாக்க முடியும் என ஆய்வாளா் கிருத்திகா கூறினாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiW2h0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS90YW1pbG5hZHUvMjAyMi9ub3YvMTMvbmV3LXRlY2hub2xvZ3ktZnJvbS1paXQtY2hlbm5haS0zOTQ4NDA2Lmh0bWzSAQA?oc=5