தமிழ்நாட்டில் கனமழை: சென்னை மாநகரம் உலகளாவிய கவனம் பெறுவது ஏன்? – BBC Tamil

சென்னைச் செய்திகள்
முக்கிய சாராம்சம்

  • சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
  • உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது.
  • மழைப் பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னையில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்த பேரழிவுகரமான வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஏழு ஆண்டுகளில் மழைப் பொழிவைக் கணிப்பது மேன்மேலும் கடினமாகி வருகிறது. அதைத் தாக்குப்பிடிக்கும் திறன் இந்த ஏழு ஆண்டுகளில் சென்னை பெருநகரத்திற்கு வந்துள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வல்லுநர்களிடம் பேசினோம்.

சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை காரணமாக தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1.2 கோடி மக்கள் வாழும் கடற்கரை நகரத்தின் தெருக்களிலும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்கியிருப்பதைக் காண முடிகிறது. இனி வரும் நாட்களில் மேலும் கனமழை பெய்யும் என்பதால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நிலையில் இருக்கின்றனர்.

அக்டோபர் 31ஆம் தேதியன்று தொடங்கிய பருவமழைக்கு நடுவே நடந்த மழை தொடர்பான சம்பவங்களில் நவம்பர் 5 வரை தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரவு கூறுகிறது.

மழை பெய்வது தீவிரமடைது மட்டுமின்றி, முன்பு போல் கணிக்க முடியாத வகையிலும் உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் அதிகாரிகள் விரைந்து செயலாற்றுவது கடினமாக இருப்பதாகக் கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல்.

பொதுவாக, பருவமழையின் இடையிலும் இறுதியிலும் தான் சென்னை போன்ற நகரங்களில் வெள்ளநீர் தேங்குவது நிகழும். ஆனால், இந்த ஆண்டில் பருவமழை தொடங்கிய மூன்று நாட்களில் இருந்தே தமிழகத் தலைநகரின் சில இடங்களில் வெள்ள நீர் தேங்கத் தொடங்கிவிட்டது.

2021ஆம் ஆண்டு நவம்பர் தொடக்கத்தில் 3 நாட்களில் பெய்த சராசரி மழை அளவு 147.27மிமீ. இந்த ஆண்டின் நவம்பர் தொடக்கத்தில் பெய்த மூன்று நாள் மழை அளவு 205.63மிமீ.

“உலகிலுள்ள பெரும்பாலான நகரங்களில், குறிப்பாக இந்திய நகரங்களில் பருவநிலையைக் கணிப்பது தொடர்ந்து சவாலாகிக் கொண்டே வருகிறது. வானிலையைக் கணிப்பது சரியாக இருந்தால் முன்னறிவிப்பு செய்து எச்சரிக்க முடியும்.

ஆனால், காலையில் கணிப்பது மாலையில் மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகி வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, பருவமழை தொடங்கிய 24 மணி நேரத்தில் 140மிமீ அளவிலான மழைப்பொழிவு நிகழும் என்று யாரும் கணிக்கவில்லை. அது எதிர்பாராத வானிலை நிகழ்வு,” என்கிறார் இடைநிலை நீர்வள ஆய்வுகளுக்கான தெற்காசிய கூட்டமைப்பின் தலைவர் முனைவர் எஸ். ஜனகராஜன்.

இந்த எதிர்பாராத கனமழையால் தண்ணீர் தேங்கியிருந்த பகுதிளில் தமிழக அரசு மோட்டார் பம்புகளை வைத்து தண்ணீரை நீக்கியது. நிவாரணப் பணிகளுக்காக பேரிடர் மீட்புக் குழுக்களும் முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், “பருவமழையின் தொடக்கத்திலேயே குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகும் அளவுக்கு இருப்பதே சென்னையின் பேரிடர் பாதுகாப்பு நிலை எந்தளவுக்கு உள்ளது” என்பதைக் காட்டுவதாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஹாரிஸ் சுல்தான்.

காலநிலை சீராக இல்லாமல் ஒழுங்கற்றதாகி வருவதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானி முனைவர்.ராக்சி மேத்யூ கோல்.

சென்னை கனமழை

அவர், “பருவமழை வடிவம் மிகவும் ஒழுங்கற்றதாகிவிட்டது. மேக வெடிப்புகள், கன மழை போன்றவை கணிக்க முடியாதவையாகி வருகின்றன. இவற்றை முன்னறிவிப்பது ஒருபுறம் இருக்கட்டும், கண்காணிப்பதே சவாலானது. 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட மேக வெடிப்புகள் பெரிய வெள்ளத்திற்கு வழிவகுத்தது அதற்கொரு சான்று. சமீபத்திய தசாப்தங்களில் இவை அடிக்கடி நடப்பதைக் காண்கிறோம்,” எனக் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சி இம்முறை முன்னெச்சரிக்கையோடு 2022 பருவமழையைத் தாக்குப்பிடிக்கத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கடந்த சில மாதங்களில் மும்முரமாக இறங்கியது. ஆனால், “அந்த கட்டமைப்புகள் போதாது என்பதை பருவமழை தொடக்கத்திலேயே காட்டிவிட்டதாக” கூறுகிறார் ஹாரிஸ் சுல்தான்.

சென்னை மாநகராட்சி மேற்கொண்ட முயற்சிகள் முழுமையாகப் பலனளிக்காதது ஏன்?

மழைப்பொழிவின் போது மேற்பரப்பில் நீர் தேங்காமல் நிலத்தடியில் செல்ல வழி செய்வது வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமின்றி கோடைக்கால நீர்த்தேவைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அண்னா பல்கலைக்கழகத்தின் நிலவியல் பேராசிரியர் எல்.இளங்கோ.

சென்னையின் நீர்த் தேவையை கோடைக் காலங்களில் பூர்த்தி செய்வதற்கான போராட்டம் பல ஆண்டுகளாகவே நீடித்து வருகிறது. நகரத்தில் பல்வேறு நீர்நிலைகள் இருந்தாலும், நீர்த்தேவையில் மூன்றில் ஒரு பங்கு தேவைக்கு நிலத்தடி நீரையே சார்ந்துள்ளது. அதை மீள்நிரப்பு செய்வதற்கு மழைப்பொழிவு அவசியம்.

சென்னை கனமழை

அதற்கான “கட்டமைப்பு இங்கு இல்லை. அதிகப்படியான மழை பெய்யும்போது அதைச் சேமித்து வைத்தால் தானே அடுத்த ஆண்டுகளில் ஏற்படக்கூடிய கோடை வறட்சியை நகரம் எதிர்கொள்ள முடியும்!” என்கிறார் சுல்தான்.

மழையின்போது தேங்கும் வெள்ளநீரை உடனடியாக அகற்றிவிட்டோம் என்று அரசு பெருமை பேசுவதையும் தாண்டி, வெள்ள நீர் தேங்காமல் இருக்கவும் அடுத்த ஆண்டு கோடைக்காக கிடைக்கும் மழைநீரைச் சேமிக்கவும் வழி செய்ய வேண்டும் என்கிறார் சுல்தான்.

நகரக் கட்டமைப்பு எப்படியிருக்க வேண்டும்?

தென்னிந்திய நகரங்களில் மழைப்பொழிவு ஒழுங்கற்றதாக உள்ளது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அளவு ஒரே நாளில் பெய்து தீர்த்துவிட்டு நின்றுவிடுவது, வரலாறு காணாத அளவுக்கு மழைக்காலம் முழுவதும் கொட்டித் தீர்ப்பது என்று ஒழுங்கற்ற பொழிவை எதிர்கொண்டு வருகின்றன.

“மழைநீர் எங்கு பொழிகிறதோ அங்கேயே எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேகரித்து, சேமிக்க வேண்டும். அரசு, தனியார் என்று அனைத்து கட்டடங்களின் கூரைகளிலும் மழைநீரைப் பிடித்து நிலத்தடியில் சேகரிக்கும் கட்டமைப்பு வேண்டும். இதைச் செய்தால், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பான நகரமாக மட்டுமின்றி வறட்சியில் இருந்தும் சென்னை பாதுகாப்பாக இருக்கும்,” எனக் கூறுகிறார் பேராசிரியர் ஜனகராஜன்.

சென்னை கனமழை

இதை ஏற்றுக்கொள்ளும் ஹாரிஸ் சுல்தான், “கட்டடங்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளோடு தெருக்களில் அமைக்கப்படும் வடிகால் அமைப்புகளை இணைக்க வேண்டும். அவற்றை நகரத்தின் நீர்த்தேக்கங்களோடு இணைக்க வேண்டும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம், சென்னை எதிர்கொள்ளும் ஒழுங்கற்ற பருவநிலை நிகழ்வுகளைச் சமாளிக்கலாம்,” எனக் கூறுகிறார்.

தமிழகத் தலைநகரம் உலகளாவிய கவனம் பெறுவது ஏன்?

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, கடல்மட்டத்தில் இருந்து தாழ்வான சமவெளியில் அமைந்துள்ளது. சென்னை காலநிலை மாற்ற விவாதங்களில் உலகளாவிய கவனம் பெறுவதற்கு அதன் நிலவியலும் ஒரு காரணம் என்கிறார் நீரியல் ஆய்வாளர் பேரா.ஜனகராஜன்.

மேலும், “சமீபத்திய ஐபிசிசி அறிக்கையில் ஆறு இடங்களில் சென்னையைக் குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் நகரம் மொத்தமும் நிலவியல்ரீதியாக பேரிடர்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 0 முதல் 5 மீட்டர் என்ற அளவில் தான் சென்னையின் பெரும்பான்மை பகுதிகள் உள்ளன. அதனால் தான் சென்னை உலகளாவிய கவனம் பெறுகிறது,” என்றார்.

ஐபிசிசி அறிக்கை கடல் மட்ட உயர்வால் இந்தியாவின் மும்பை, சென்னை ஆகிய நகரங்கள் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று எச்சரித்துள்ளது. பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வதால், நகரங்களின் உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் மிகப்பெரும் பேரழிவுகளைச் சந்திக்கவுள்ள நகரங்களில் சென்னையும் ஒன்று.

சென்னை கனமழை

உலகளவில் 2050ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய அளவில் வெள்ள சேதங்களை எதிர்கொள்ளும் 20 கடலோர நகரங்களில் சென்னையும் ஒன்று.

உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுடைய நகரங்களில் 56 சதவீதம், சூறாவளி, வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு ஆகிய 6 பேரிடர்களில் ஏதேனும் ஒன்றிலாவது பாதிக்கப்படுகின்றன. சென்னை, நகோயா, டெஹ்ரான் ஆகிய பெருநகரங்கள் 80 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்.

தென்னிந்திய நகரங்களில் காலநிலையின் தாக்கம் இனி எப்படியிருக்கும்?

“பலவீனமான புயலில் இருந்து மிகக் கடுமையான சூறாவளியாக உருவாக இரண்டு முதல் நான்கு நாட்கள் வரை எடுத்துக் கொண்ட சூறாவளிகள், இப்போது ஒரே நாளுக்குள் தீவிரமடைந்து வருகின்றன. இது, முன்னறிவிப்பு செய்வது, பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு இனி மிகச் சொற்ப நேரத்தையே வழங்கும்,” என்கிறார் ராக்சி மேத்யூ கோல்.

நாம் நகரங்களை “மறுவடிவமைப்பு” செய்ய வேண்டும் என்கிறார் ராக்சி, “இப்போது காலநிலை மாற்றம், புயல்களின் தீவிரம் ஆகியவை நம் முன்னறிவிப்பு கட்டமைப்புகளுக்கு மேலதிக சவால்களைக் கொடுக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் முன்னறிவிப்புகளுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக, தீவிரமடைந்து வரும் புயல்கள், உயரும் கடல் மட்டங்களுக்கு ஏற்ப கடலோர சமூகங்களுக்கு உதவும் நீண்ட கால கொள்கைகளை நாம் வகுக்கவேண்டும்.” என்கிறார் ராக்சி.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiL2h0dHBzOi8vd3d3LmJiYy5jb20vdGFtaWwvYXJ0aWNsZXMvYzk4MGd3anJqZHdv0gEzaHR0cHM6Ly93d3cuYmJjLmNvbS90YW1pbC9hcnRpY2xlcy9jOTgwZ3dqcmpkd28uYW1w?oc=5