‘தொடர் மழையால், தமிழகத்தில், ‘மெட்ராஸ் ஐ’ பரவல் அதிகரித்துள்ளது. அதனால், கண் நலன் காக்க டாக்டர் அறிவுரையை கடைப்பிடிக்க வேண்டும்’ என, நாமக்கல் கண் மருத்துவர் ரெங்கநாதன் கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:
தமிழகத்தில், தொடர் மழை பெய்து வருவதால், பொதுமக்களுக்கு, சளி, காய்ச்சலுடன் சேர்த்து, ‘மெட்ராஸ் ஐ’ என்ற கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த கண் நோய், கண்ணில் கன்சங்டிவா என்ற வெள்ளை படலத்தில் ஏற்படும் நோயாகும். இது, அடினோ வைரஸ் என்ற கிருமியினால் வருகிறது. இந்நோய், முதன் முதலில், சென்னை எக்மோர் பிராந்திய கண் மருத்துவமனையில் கண்டுபிடிக்கப்பட்டதால், ‘மெட்ராஸ் ஐ’ என்று அழைக்கிறோம்.
இந்த நோய், வைரஸ் கிருமியினால் வருவதால், 2 வாரங்களில் எளிதில் சிகிச்சை மூலம் சரியாகும் தன்மை கொண்டாலும், இது கருவிழி பாதிப்பை ஏற்படுத்தி, கண்ணில் கருவிழியில் சிறு சிறு தழும்பை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், இதனுடன் சேர்ந்து வரும் பாக்டீரியா கிருமி பாதிப்பு வரவாய்ப்புள்ளது. அதனால், கண் மருத்துவரின் தொடர் சிகிச்சை அவசியம். கண்ணில் எரிச்சல், கண் வலி, கண் சிவத்தல், கண்ணில் மண் விழுந்ததைப்போல் உறுத்தல், கண் பீளை மற்றும் நீர் வருதல், காலை எழும்போது கண் ஒட்டிக்கொள்ளுதல், கண்ணில் ரத்தம் கலந்த நீர் வடிதல், கண் மங்கலாக தெரிதல் போன்ற அறிகுறிகளுடன் வரும் இந்த கண் நோயானது, சளிக்காய்ச்சலுடன் சேர்ந்து வரலாம்.
மேற்கண்ட அறிகுறிகளுடன், உங்களுக்கு, ‘மெட்ராஸ் ஐ’ இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியவை உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். உங்களுக்கு இந்த பாதிப்பு முழுவதும் சரியாக, 15 நாட்கள் ஆகும். கண் மருத்துவர் குறிப்பிடும் கால இடைவெளியில், உங்கள் கண்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ‘மெட்ராஸ் ஐ’ நோய் வந்தவர்கள், கைக்குட்டையால் கண்களை துடைப்பதை தவிர்க்க வேண்டும். இது, ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவும் கண் நோய் என்பதால், சமூகப் பரவலை தடுக்க மேற்கண்ட அறிவுரைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி சில வரிகளில்… நாமக்கல்

சாலையில் தேங்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள், மக்கள் அவதி
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzE3NDLSAQA?oc=5