வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’: சென்னை மக்கள் உஷார் – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

வெண் படல சுழற்சி என்று கூறப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண்நோய் சென்னையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.

கண் விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் இந்த வைரஸ் பாதிப்பதனால், மெட்ராஸ் ஐ நோய் உருவாகிறது.

இந்த நோய் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவும் என்பதனால், பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை உபயோகப்படுத்தினால் மற்றவர்களுக்கு இதே நோய் தொற்று பரவும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

விழிப்பகுதி சிவந்து காணப்படுதில் இருந்து கண் எரிச்சல், நீர் சுரந்து கொண்டே இருத்தல், வெளிச்சத்தை பார்க்கும் போது கண் கூசுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ-யின் அறிகுறிகள் ஆகும்.

பொதுவாக ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ கண்நோய் ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க டாக்டர்கள் வலியுறுத்துகிறார்கள்.

கடந்த வாரம் வரை தினமும் சுமார் 5 பேர் மெட்ராஸ் ஐ கண்நோயால் பாதிக்கப்பட்டு சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வருகைபுரிந்து சிகிச்சை பெற்று வந்தார்கள்.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்து, தினமும் சராசரியாக 50 நோயாளிகள் வருகை தரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைக்கு தினமும் 100க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற வருகைபுரிவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ், “அனைத்து மருந்துகளும் போதிய அளவில் இருப்பதால் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஐந்து நாட்களில் குணமடையும் நோயாக இருந்தாலும், அலட்சியப்படுத்தினால் பார்வை இழப்பு கூட நேரும் அபாயம் உள்ளது.

மேலும் மருந்துகளை சுயமாக வாங்கி பயன்படுத்துவது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இலவசமாக சிகிச்சை கிடைக்க கூடிய எழும்பூர் கண் மருத்துவமனையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்தல், கண்கள் அருகே கைகளை கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டால் மெட்ராஸ் ஐ தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்”, என்று கூறுகிறார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L291dGJyZWFrLW9mLW1hZHJhcy1leWUtaW4tY2hlbm5haS1hbmQtc3Vycm91bmRpbmctYXJlYXMtNTQzMzA0L9IBAA?oc=5