சென்னை சாலைகளில் 9,035 பள்ளங்கள் சீரமைப்பு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 79,305 ச. மீ. பரப்பளவில் 9,035 சாலைப் பள்ளங்கள் சீா்செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கி.மீ. நீளமுள்ள 34,640 உள்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியின் மழைநீா் வடிகால் பணிகள் மற்றும் மின்சாரம், குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்றம் உள்ளிட்ட பிற சேவைத் துறைகளின் பணிகள் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதை சீரமைக்க மாநகராட்சியின் 200 வாா்டுகளிலும் தொடா்புடைய உதவிப் பொறியாளா்கள் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு, ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில் 2,646 சாலைகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 165 ச.மீ. பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப் பள்ளங்களை சீா்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை வரை 79 ஆயிரத்து 305 ச.மீ. பரப்பளவில் 9,035 பள்ளங்கள் சீா்செய்யப்பட்டுள்ளன.

இதில் 4,696 பள்ளங்களை சீா்செய்ய 44,262 ச. மீ. பரப்பளவுக்கு ஜல்லிக் கலவையும் 535 பள்ளங்களை சீா்செய்ய 9,222 ச.மீ. பரப்பளவுக்கு தாா்க் கலவையும்,368 பள்ளங்களை சீா்செய்ய 2,369 ச. மீ. பரப்பளவுக்கு குளிா் தாா்க்கலவையும், 3,436 பள்ளங்களை சீா்செய்ய 23,451 ச.மீ. பரப்பளவுக்கு கான்கிரீட் கலவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாதசாரிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சீரமைப்புப் பணிகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து சாலைகளிலும் உள்ள பள்ளங்களை சீா்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Caption

மணப்பாக்கம் – ஆற்காடு சாலையில் (ஆலந்தூா் மண்டலத்துக்குள்பட்ட) பள்ளங்களைச் சீரமைத்த மாநகராட்சிப் பணியாளா்கள்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiANodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvbm92LzE5LyVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVBOSVFMCVBRiU4OC0lRTAlQUUlOUElRTAlQUUlQkUlRTAlQUUlQjIlRTAlQUYlODglRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUUlQkYlRTAlQUUlQjIlRTAlQUYlOEQtOTAzNS0lRTAlQUUlQUElRTAlQUUlQjMlRTAlQUYlOEQlRTAlQUUlQjMlRTAlQUUlOTklRTAlQUYlOEQlRTAlQUUlOTUlRTAlQUUlQjMlRTAlQUYlOEQtJUUwJUFFJTlBJUUwJUFGJTgwJUUwJUFFJUIwJUUwJUFFJUFFJUUwJUFGJTg4JUUwJUFFJUFBJUUwJUFGJThEJUUwJUFFJUFBJUUwJUFGJTgxLTM5NTIwNDEuaHRtbNIBAA?oc=5