அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: தடுக்க சில வழிகள்! – Dinamalar

சென்னைச் செய்திகள்
அந்தந்த பருவகாலங்களில் வரும் நோய்களில் ஒன்று ‘மெட்ராஸ் ஐ’. வெயில் நன்கு கொளுத்தும் காலத்தில் பரவும் கண்களை உறுத்தும் நோயான மெட்ராஸ் ஐ தொற்று தற்போது பரவி வருகிறது. விழியையும் இமையையும் இணைக்கும் ஜவ்வுப் படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றின் காரணமாக இது ஏற்படுகிறது.

அறிகுறிகள் :

கண் விழிப்பகுதி சிவந்து காணப்படுவது இதன் முதல் அறிகுறி. கண் எரிச்சல், கண்ணிலிருந்து தொடர்ந்து நீர் வழிதல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல். இமை மற்றும் கண்களைச் சுற்றிலும் வீக்கம், கண் வலி, போன்றவை மெட்ராஸ் ஐ நோயின் அறிகுறியாகும். மேலும் கண் இமைக்குள் ஏதோ ஒரு பொருள் மாட்டிக் கொண்டிருப்பது போன்ற ஓர் உணர்வு, உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும்.

சிலருக்கு பார்வைக்கூட மங்கலாகக் கூடும்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்றால் இதனை எளிதில் குணப்படுத்தலாம். கூடுதலாக பாக்டீரியா தாக்கம் கண்ணில் ஏற்பட்டால் கண்ணிலிருந்து மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சீழ் வடியும் நிலை வரலாம். காய்ச்சல் வரலாம்.
சில சமயம் ‘மெட்ராஸ் ஐ’ஆக இல்லாமல் கருவிழியில் பிரச்னை, கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்காவும் இருக்கலாம். ஆகவே, இந்த பருவத்தில் கண்களில் எதாவது பாதிப்பு வந்தால் உடனே கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்.

பரவும் விதம்:

வைரஸ் கிருமியால் ஏற்படும் மெட்ராஸ் ஐ கண் நோய் வேகமாகப் பரவும். மெட்ராஸ் ஐ பாதிப்படைந்தவருடன் அருகிலிருப்பது, அவர் பயன்படுத்திய கைக்குட்டை, துணி, படுக்கை, தலையணையை தவிர்க்க வேண்டும்.

சிகிச்சை முறை :

மெட்ராஸ் ஐ சாதாரண பிரச்னைதானே என நினைத்து அருகில் உள்ள மருந்து கடையில் கண் சொட்டு மருந்துகளை வாங்கி உபயோகிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மருத்துவரை சந்தித்து உரிய பரிசோதனை மற்றும் நோய் உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் பரிந்துரைக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மற்றும் கண் சொட்டு மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மெட்ராஸ் ஐ பரவாமல் இருக்க சில டிப்ஸ் :

• கண்களில் வெயில் படாமல் இருக்கவும், பரவுவதை தடுக்கவும் கூலிங்கிளாஸ் அணியலாம்.
• பாதிக்கப்பட்வர்களின் டவல், தலையணை உறைகள் மற்றும் மேக் அப் சாதங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
• பாதிக்கப்பட்டவர்கள் தங்களை ஒரு சில நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
• அடிக்கடி கைகளை கழுவவேண்டும்.
• கண் தொற்றுள்ளவர்கள் அவர்கள் பயன்படுத்தும் கைக்குட்டை, டிஸ்யூ பேப்பர்களை பத்திரமாக அகற்ற வேண்டும்.
• கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி லென்ஸ்களை அணியலாம்.
• பாதிக்கப்பட்டவர்கள் அந்த சமயத்தில் நீச்சல் குளம், உடற்பயிசிக்கூடம் போன்ற இடங்களை தவிர்க்கலாம்.
• அதேபோல் எளிதில் பரவும் என்பதால் பள்ளி அலுவலகங்கள், மால் போன்ற பொது இடங்களுக்கு செல்வதை சில நாட்கள் தவிர்க்கலாம்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiLWh0dHBzOi8vbS5kaW5hbWFsYXIuY29tL2RldGFpbC5waHA_aWQ9MzE3MjYzONIBAA?oc=5