சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவுக்கு உணவு டெலிவரி செய்த சென்னை பெண் | Chennai woman delivers food from Singapore to Antarctica – hindutamil.in – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சிங்கப்பூர்: சென்னையைச் சேர்ந்த மானசா கோபால் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவில் உள்ள வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நான்கு கண்டங்கள், 30 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து அவர் உணவு டெலிவரி செய்துள்ளார். இது உணவு டெலிவரிக்காக மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக நீண்ட பயணம் ஆகும். தன்னுடைய பயணத்தை வீடியோவாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கையில் உணவுப் பையுடன் சிங்கப்பூரிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறார் மானசா கோபால். விமானம் மூலமாக ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் நகருக்குச் செல்கிறார். அங்கிருந்து அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் செல்கிறார். பிறகு அங்கிருந்து உசுவையா நகருக்கு செல்கிறார். இறுதியில் அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு விமானம் ஏறுகிறார். பனி மலையின் மீது நடந்து இறுதியில் வாடிக்கையாளரின் முகவரியை அடையும் மானசா, உணவுப் பையை அவரிடம் ஒப்படைக்கிறார்.

சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் படித்த மானசா, உலக நாடுகளுக்குப் பயணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்டார்டிகாவுக்கு செல்ல விரும்புவதாகவும் அதற்கு நிதி திரட்டிக் கொண்டிருப்பதாகவும் சென்ற ஆண்டு அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில், ஃபுட் பாண்டா என்ற உணவு டெலிவரி நிறுவனம் அவருக்கு அண்டார்டிகாவுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiaWh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy93b3JsZC85MDA3NjItY2hlbm5haS13b21hbi1kZWxpdmVycy1mb29kLWZyb20tc2luZ2Fwb3JlLXRvLWFudGFyY3RpY2EuaHRtbNIBAA?oc=5