குளுமையான நகரமாக மாறிய சென்னை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு நேற்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் பெய்த பெருமழையால் மிரண்டிருந்த சென்னை மக்கள், நாளைய பொழுது எப்படியோ? என்ற பயத்திலேயே நேற்று முன்தினம் தூங்க சென்றனர்.

ஆனால் நேற்றைய பொழுது சென்னை மக்களுக்கு இன்பமாய் விடிந்தது என்றே சொல்லலாம். அதிகாலை முதலே லேசான சாரல் மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசிக்கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல நகரின் குளுமை கூடிக்கொண்டே இருந்தது. மழைக்காலத்திலும் வெப்பத்துக்கு பஞ்சமில்லா சென்னையில் நேற்று நாள் முழுவதும் குற்றால சாரல் போன்ற லேசான மழையும், கொடைக்கானல் போன்ற குளுமையும் நகரத்து மக்களை குளிர வைத்தது.

சமூக வலைதளங்களிலும் சென்னை குளிர் நகராய் மாறி போன செய்தியே அதிகம் பகிரப்பட்டு வந்தது. வீடுகளில் மின்விசிறிகளுக்கும், ஏ.சி.களுக்கும் தற்காலிக ஓய்வு தரப்பட்டது. தரையும் ஜில்லென இருந்தது.

அந்தவகையில் ஒட்டுமொத்த சென்னைவாசிகளின் இல்லங்களும், உள்ளங்களும் நிலவி வரும் ரம்மியமான சூழலால் குளிர்ந்து போனது என்றால் அது மிகையல்ல.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiSGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL2NoZW5uYWktYmVjb21lLWEtY29vbC1jaXR5LTUzOTU5MtIBAA?oc=5