மின்சார வாகனங்களுக்கு ‘மாஸ்டர் பிளான்’ – சென்னை மாநகராட்சி மெகா திட்டத்தின் முதற்கட்ட அம்சங்கள் – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் சார்ஜிங் நிலையங்கள் தொடர்பாக மாஸ்டர் பிளான் தயாரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி போன்ற பெருநகரங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த பல்வேறு மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் மின்சார பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. மின்சார பேருந்துகளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதைத் தவிர்த்து மின்சார இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், சென்னையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வரும் காலங்களில் மின்சார வாகனங்கள் எண்ணிக்கை எந்த அளவுக்கு உயரும், இதற்கு தேவையான சார்ஜிங் வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக மாஸ்டர் பிளான் ஒன்றை தயார் செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. விரைவில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி நடத்தவுள்ளது. தமிழக அரசு ஏற்கெனவே 2019-ம் ஆண்டு மின்சார வாகனக் கொள்கையை வெளியிட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட கொள்கை விரைவில் வெளியாக உள்ளது. இந்த கொள்கையின் அடிப்படையில் இந்த மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:

மின்சார வாகனங்கள்

  • பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க கூடிய ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றுவது.
  • அரசு பேருந்துகளை மின்சார பேருந்துகளாக மாற்றுவது.
  • கல்வி நிறுவனங்களின் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது.
  • சிறிய ரக சரக்கு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவது.
  • இரு சக்கர மின்சார வாகனங்களுக்கு பல்வேறு வரிச் சலுகை அளிப்பது.

சார்ஜிங் நிலையங்கள்

  • 3*3 Grid அளவுள்ள சார்ஜிங் நிலையங்கள் அமைப்பது.
  • சாலைகளில் 25 கிலோ மீட்டருக்கு ஒரு சார்ஜிங் நிலையம்.
  • அரசு அலுவலகங்களில் சார்ஜிங் நிலையம்.
  • புதிய கட்டிடங்களில் சார்ஜிங் வசதி உருவாக்க கட்டிட விதிகளில் திருத்தம்.
  • 50-க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஊக்குவிப்பது.
  • தியேட்டர்கள், வணிக வளாகம், உணவகம் உள்ளிட்ட இடங்களில் சார்ஜி நிலையங்கள் அமைப்பது.

இவை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து மின்சார வாகனங்களுக்கான மாஸ்டர் பிளான் தயார் செய்யப்படவுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMicmh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTAzNDU2LWNoZW5uYWktY29ycG9yYXRpb24tcHJlcGFyZS1tYXN0ZXItcGxhbi1mb3ItZWxlY3RyaWMtdmVoaWNsZXMuaHRtbNIBAA?oc=5