பருவநிலை மாற்றம் காரணமாக குமரியில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’-தனிமைப்படுத்தி கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல் – தினகரன்

சென்னைச் செய்திகள்

நாகர்கோவில் :  குமரியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது. குமரியில் கடந்த இரு மாதங்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில், இருநாட்களாக மழை இன்றி மிதமான அளவில் வெயில் அடிக்கிறது. தற்போது பனி மூட்டம் மிகுந்து காணப்படுகிறது. மதிய நேரமும் கூட வயல்வெளிகளில் பனிமூட்டம் காணப்படுகிறது.

பருவநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் மற்றும் இருமல் ஜலதோஷம் பரவிய நிலையில் மெட்ராஸ் ஐ பாதிப்பும் அதிகம் பரவி வருகிறது. குமரியில் அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள கண் மருத்துவமனை பிரிவில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று 24ம் தேதி வரை 106 பேர் மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு சிகிச்சை பெற வந்துள்ளனர். பத்மனாபபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி முதல் நேற்று வரை 14 பேர் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இதுதவிர பலர் மருந்து கடைகளில் ஆயின்மென்ட் வாங்குவது மற்றும் சுயமருத்துவம் என தவறான அணுகுமுறையிலும் ஈடுபட்டுள்ளனர்.  பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அவர்கள் மூலம் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் தொற்று பரவி வருகிறது. பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்கள் வாயிலாகவும் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகிறது.  ஏற்கனவே தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக சென்னை உள்படவெளிமாவட்டங்களில் கண்வலி ஏற்பட்டு அது குமரியிலும் பரவி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் குமரி  மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்  கூறியிருப்பதாவது:    பருவமழை காலத்தில் வழக்கமாக நோய்கிருமிகள்  அதிக  அளவில் பெருகுகிறது.  ‘மெட்ராஸ் ஐ’  கண்வலி என்பது  ஜலதோசத்தை உண்டாக்கும்  அடினோ வைரஸ், மற்றும் கெர்பஸ் சிம்ளக்ஸ், என்டிரோ வைரஸ் என்னும் வைரஸ்  கிருமியால் உண்டாகிறது.  இது கண்களில் நீர் வடிதலை உருவாக்குகிறது.  50%  மக்களுக்கு தானாகவே சரியாகிவிடும்.  அதிக பாதிப்பை உணர்ந்தவர்கள் மட்டுமே  மருத்துவரைப் பார்க்க வேண்டியிருக்கும். இந்நோய் தாக்கம் நம் உடலின் நோய்  எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து 2 நாள்முதல் 15 நாட்கள் வரை நீடிக்க  கூடும்.

அறிகுறிகளாக சிவப்பு நிற கண்கள்,  கண்களில் நீர் வடிதல், கண்களில்  லேசான வீக்கம், எரிச்சல், உறுத்தல் மற்றும் அரிப்பு காணப்படும். இந்நோய், பாதிக்கப்பட்ட நபரை பார்ப்பதால் பரவுவதில்லை.  நோய்  பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணீரில் சுமார் 10 கோடி வைரஸ் கிருமிகள்  இருக்கும்.  பாதிப்புக்குள்ளான நபர் கண்களிலிருந்து வடியும் நீரை தன்  கைகளால் துடைத்து பின்னர் வேறு பொருட்களை தொடும் போது இவர் கையிலுள்ள வைரஸ்  அந்த பொருட்களில் தொற்றிக் கொள்கிறது.

இவ்வாறு தொற்றுக்குள்ளான ஒரு  பொருளை இன்னொருவர் தொடும் போது அந்த வைரஸ் கிருமிகள் அவர் கைகளில் தொற்றிக்  கொள்கிறது.  அவரின் கைகள்,  கண்களில் படும் போது அவருக்கு தொற்று  ஏற்படுகிறது. கைகளை அடிக்கடி சுத்தமான நீரில் சோப்பு போட்டு கழுவ  வேண்டும்.  கைகளை அடிக்கடி ‘சானிடைசர்’ பயன்படுத்தி  கழுவ வேண்டும்.
 
பாதிப்பிற்குள்ளான நபர் தன்னை தனிமை படுத்திக் கொள்ள வேண்டும். பிறரது  பொருள்களை தொடாமல் இருக்க வேண்டும். கண்களை கைகளால் தொடவோ,  கசக்கவோ கூடாது.   பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவ சிகிச்சைக்கு அருகிலுள்ள  அரசு ஆரம்ப சுகாதார மையம் மற்றும்  அரசு மருத்துவமனை மருத்துவரை அணுக   வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எரிச்சலை குறைக்க சொட்டு மருந்து

இதுகுறித்து டாக்டர் ஜேக்சன் கூறியதாவது: சென்னையில் 1918ம் ஆண்டு புதுவகையான கண்  நோய் ஏற்பட்டது. இதனை மருத்துவர்கள் ஆராய்ந்த போது,  அடினோ எனப்படும்  வைரசல் ஏற்பட்டது தெரிய வந்தது. சென்னையில் (அப்ேபாது மெட்ராஸ் என  அழைக்கப்பட்டது)  கண்டு பிடிக்கப்பட்டதால், அதன் பெயரை சூட்டினர். இதனை  பிங்க் ஐ, மும்பை ஐ எனவும் ஆங்கிலத்தில் கஞ்சங்டிவிடிஸ் எனவும்  அழைக்கின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்நோய் ஏற்படுகிறது.

கண்வலி வந்தால் 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை இருக்கலாம். கண்கள் சிவந்து காணப்படுவது மிதமாக பாதிப்பு ஆகும். கண்கள் சிவந்து எரிச்சல் இருந்தால் மாடரேட் எனப்படும் 2வது வகையாகவும், எரிச்சல் வீக்கம் இருந்தால் சிவியர் பாதிப்பு என 3 ஆகவும் வகைப்படுத்தியுள்ளனர். இந்த தன்மைகளுக்கு ஏற்ப சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

சிலர் சுயமருத்தும் மேற்கொள்கின்றனர். இது கண்களுக்கு மிகவும் ஆபத்தை உருவாக்கி விடும். பொதுவாக மெட்ராஸ் ஐ வந்தால் 5 முதல் 10 நாட்களில் தானாகவே குணமாகி விடும். அதன் எரிச்சலை கட்டுப்படுத்தவே சொட்டு மருந்து  4 மணி நேர இடைவெளியில் விடவேண்டும்.  எனவே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சென்று டாக்டர்கள் பரிந்துரையுடன்  சொட்டு மருந்து வாங்குவதே நல்லது.

கண்ணாடி ஏன்?

பலரும் கருப்புக் கண்ணாடி அணிவதால் மெட்ராஸ் ஐ பரவாது என்கின்றனர். ஆனால், கண்வலி வந்தவர் தனது கண்களை கசக்கி விட்டு, அவர் தொடும் பொருட்களை மற்றவர்கள் தொடும் போதே பரவுகிறது. கண்களை பார்ப்பதால் பரவாது. ஆனால் கருப்பு கண்ணாடி அணிவதால் ஏற்கனவே எரிச்சல் இருக்கும் கண்ணிற்கு சூரிய ஒளியின் வெளிச்சம் காரணமாக ஏற்படும் கூடுதல் எரிச்சல் குறையும்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vTmV3c19EZXRhaWwuYXNwP05pZD04MTcyNjjSAQA?oc=5