சென்னை மற்றும் 14 மாவட்டங்களுக்கு 8, 9-ந் தேதிகளில் அதிகனமழை எச்சரிக்கை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

இது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (புதன்கிழமை) புயலாக வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது புயல் சின்னமாக இன்று மாலை உருவாக உள்ள நிலையில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (8-ந் தேதி) மற்றும் 9-ந் தேதிகளில் வட தமிழகம்-புதுவை, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன்று காலை 5.30 மணி ஆய்வின்படி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்கிழக்கு அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வலுவடைந்துள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இலங்கை திரிகோண மலைக்கு 570 கி.மீ கிழக்கே, ஜப்னாவிற்கு 710 கி.மீ. தொலைவில் தென் கிழக்கே, காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கே 770 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கில் 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக தீவிரமடைகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு இன்று மாலையில் நகர்ந்து வந்து புயல் சின்னமாக வலுவடையும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பிறகு தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நாளை 8-ந் தேதி நெருங்கி வரும் என்றும், இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம்-புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் மையம் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதால் நாளை (8-ந் தேதி) முதல் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

9-ந் தேதி தமிழகம், புதுவை, காரக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் நாமக்கல், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். 10-ந் தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

நாளை முதல் 10-ந் தேதி வரை 15 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால் உஷார் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார்படுத்தப்பட்டுள்ளனர். தமிழக வட கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 24 செ.மீ. அதிகனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

புயல் உருவாவதால் அந்தமான் கடல் பகுதிகள், தென் கிழக்கு பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மாலையில் இருந்து மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும் இடையே 70 கி.மீ. வேகத்தலும், 8, 9-ந் தேதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம்-புதுவை, அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதியிலும் இலங்கை கடல் பகுதியிலும், சூறாவளி காற்று வீசுவதால் 10-ந் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL2hlYXZ5LXJhaW4td2FybmluZy1mb3ItY2hlbm5haS1hbmQtMTQtZGlzdHJpY3RzLW9uLTh0aC1hbmQtOXRoLTU0NTY2M9IBcGh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS9oZWF2eS1yYWluLXdhcm5pbmctZm9yLWNoZW5uYWktYW5kLTE0LWRpc3RyaWN0cy1vbi04dGgtYW5kLTl0aC01NDU2NjM?oc=5