சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையங்களில் விரைவில் மறுசீரமைப்பு பணிகள் – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள பறக்கும் ரெயில் நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல ரெயில் நிலையங்களில் “லிப்ட்” ‘எஸ்கலேட்டர்கள்’ பழுதடைந்து இயங்காமல் உள்ளன.

ரெயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் சீரமைக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன. பல இடங்களில் இரவினில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாக உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே உடனடியாக பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்பாடு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) இந்த பணிகளை விரைவில் செய்ய உள்ளன.

இதில் புதிய என்ஜின், ‘ஏசி கோச்’ பெட்டிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.

இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் ரெயில் நிலைய கட்டிடங்கள் மிகவும் பழமையாக உள்ளன. பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனவே பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பறக்கும் ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் புதிய என்ஜின், கூடுதலாக ‘ஏசி கோச்’ பெட்டிகள் பயணிகள் வசதிக்காக விரைவில் அமைக்கப்பட உள்ளது.

மேலும் வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtcmVub3ZhdGlvbi13b3Jrcy1hdC1jaGVubmFpLWJlYWNoLXZlbGFjaGVyeS1yYWlsd2F5LXN0YXRpb25zLXNvb24tNTQ2MTE30gF-aHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL3N0YXRlL3RhbWlsLW5ld3MtcmVub3ZhdGlvbi13b3Jrcy1hdC1jaGVubmFpLWJlYWNoLXZlbGFjaGVyeS1yYWlsd2F5LXN0YXRpb25zLXNvb24tNTQ2MTE3?oc=5