திருச்சியில் அதிகரித்து வரும் மெட்ராஸ் ஐ கண் நோய்-டாக்டர் அறிவுரை – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

திருச்சி:

கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று மட்டுமே மனதில் நிலைத்திருந்த நிலையில் தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் நிலைகொண்டுள்ளது. லேசான கண் உறுத்தலில் தொடங்கும் இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரை சார்ந்த, அதாவது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

மெட்ராஸ் ஐ என்ற பெயர் இருந்தபோதிலும் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 2 முதல் 3 நாட்கள் வரை மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்த கண் நோயின் வீரியம் அதிகரித்துள்ளதால் இந்த சீசனில் 6 நாட்கள் வரை பாடாய்படுத்தி விடுகிறது.

குறிப்பாக கண்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயலை செய்யாமல் இருந்தாலே போதுமானது என்ற அறிவுரை கூறப்பட்டு இருந்தாலும் அனைவரையும் பாதிக்க செய்துவிடுகிறது.

இந்தநிலையில் திருச்சியில் தற்போது மெட்ராஸ் ஐ கண் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு சில நாட்கள் வீட்டுக்குள் முடக்குகிறது. இதனை தடுக்கும் வகையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், அதற்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவத்துறை தலைவர் பார்த்திபன் புருஷோத்தமன் கூறுகையில், காலநிலை மாற்றத்தின் காரணமாக மெட்ராஸ் ஐ கண் நோய் தற்ேபாது வேகமாக பரவி வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் 20 முதல் 25 பேர் இதற்கான சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள். இதேபோல பல்வேறு மருத்துவமனைகளிலும், குறிப்பாக கண் மருத்துவமனைகளுக்கும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த நோய் குழந்தைகளிடம் அதிகம் பரவி, பின் அவர்களிடமிருந்து பெற்றோருக்கு பரவுகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 3 நாட்களில் சரியாகும். ஆனால் தற்போது தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளதால் 5 முதல் 6 நாட்கள் வரை நீடிக்கிறது.

கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ கண் நோயின் அறிகுறிகளாகும்.பொதுவாக ஒருகண்ணில் மெட்ராஸ் ஐ பிரச்சினை ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு தொற்றிக்கொள்ளும்.

அதேசமயம் மெட்ராஸ் ஐ பிரச்சினையால் பாதிக்கப்ட்டவர்கள் பார்த்தலே நமக்கும் தொற்று பரவிவிடும் என்பது தவறான கருத்து. இது பார்ப்பதாலோ, காற்றிலோ பரவக்கூடியது அல்ல. மாறாக இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, கண்ணாடி, உடைகள் ஆகியவற்றை பிறர் உபயோகப்படுத்தும் போது இது பரவுகிறது.

எனவே இந்த நோயினால் பாதிக்கப்படுவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் பரலை எளிதில் தடுகக்கலாம். அதே சமயம், இது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமாக நோய்த் தொற்றுதான், அச்சப்பட தேவையில்லை.

ஆனால் டாக்டரிடம் ஆலோசனை பெறாமல் தவறான கண் மருந்து வாங்கி செலுத்தினால் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்கென தனி சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கண் நோய் அறிகுறி உள்ளவர்கள் வந்து இலவச சிகிச்சை பெறலாம் என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL2Rpc3RyaWN0L3RyaWNoeS1uZXdzLXRoZS1ncm93aW5nLW1hZHJhcy1pLWRvY3Rvci1hZHZpY2UtNTQ1ODk30gFjaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL2Rpc3RyaWN0L3RyaWNoeS1uZXdzLXRoZS1ncm93aW5nLW1hZHJhcy1pLWRvY3Rvci1hZHZpY2UtNTQ1ODk3?oc=5