மாண்டஸ் புயல் | சென்னையில் 24 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பும்: மாநகராட்சி உறுதி – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னையில் 300 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றிலுமாக கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதன் காரணமாக சென்னையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளன. மாநகராட்சி ஊழியர்கள் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் இயல்பு நிலை திரும்பும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,” சென்னையில் ஒவ்வொரு மண்டலத்திலும் சராசரியாக 25 முதல் 30 மரங்கள் விழுந்துள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதாகவும், கிளைகள் முறிந்தும் உள்ளன. நேற்று இரவு முதல் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மட்டும் 5000 மாநகராட்சிப் பணியாளர்கள் பணியில் இருந்தனர்.சென்னை முழுவதும் 25 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். 24 மணி நேரத்தில் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பும்.” என்றனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiY2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTEyNDY3LWNoZW5uYWktd2lsbC1iZS1iYWNrLXRvLW5vcm1hbC13aXRoaW4tMjQtaG91cnMuaHRtbNIBAA?oc=5