சென்னை போக்குவரத்தை குறைக்கும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அடுத்த நிலையம் எங்கே வரவிருக்கிறது? – Indian Express Tamil

சென்னைச் செய்திகள்

தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தாள் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் அமைக்கவுள்ளனர். இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை தமிழக அரசு கட்ட முன்மொழிந்துள்ளது.

கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் (CMBT) நெரிசலைக் குறைக்க முன்மொழியப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையமானது தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு நிலையமாக அமையும் என்றும் இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுஅளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் அமைக்கவிருக்கும் ரயில் நிலையத்திற்கும், பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைப்பதற்கான ஸ்கைவாக் திட்டத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்பட்டபோது, ​​சென்னையின் ஒரே பேருந்து முனையமாக திகழ்ந்தது. இப்போது, ​​மாதவரம், கிளாம்பாக்கம் என்று சென்னையின் மற்ற இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்கப்படும்போது பண்டிகை காலங்களில் கூட நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.

88 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் உட்பட 2,350 பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.315 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) கட்டுமானப்பணிக்காக வழங்குகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி, வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் நிறைவடையும் என்று தெரிவித்தார்.

தற்போது மாதவரத்தில் இருந்து ஆந்திராவுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருமழிசை பேருந்து முனையத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்ததும் அங்கிருந்து மேற்கு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படும். மேலும், மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வை சி.எம்.டி.ஏ., துவக்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMif2h0dHBzOi8vdGFtaWwuaW5kaWFuZXhwcmVzcy5jb20vdGFtaWxuYWR1L2tpbGFtYmFra2FtLWJ1cy10ZXJtaW51cy10dXJucy1vdXQtdG8tYmUtdGhlLW5leHQtYmlnZ2VzdC10ZXJtaW51cy1vZi1jaGVubmFpLTU1ODY5MC_SAYQBaHR0cHM6Ly90YW1pbC5pbmRpYW5leHByZXNzLmNvbS90YW1pbG5hZHUva2lsYW1iYWtrYW0tYnVzLXRlcm1pbnVzLXR1cm5zLW91dC10by1iZS10aGUtbmV4dC1iaWdnZXN0LXRlcm1pbnVzLW9mLWNoZW5uYWktNTU4NjkwL2xpdGUv?oc=5