தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: சென்னை … – Hindu Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தாயம் விளையாட்டில் தோற்கடித்தவரை கத்தரிக்கோலால் தாக்கி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் தாயம் விளையாடிய போது, ஆனந்தன் என்பவரை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார். சில நாட்கள் கழித்து சிந்தாதரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் தனசேகர் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்தன், தனசேகரை தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு, மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் தனசேகரின் மார்பு பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தனசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், தனசேகர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீஸார்,ஆனந்தனை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTE1Mjg2LWxpZmUtaW1wcmlzb25tZW50LWZvci10aGUta2lsbGVyLWNoZW5uYWktc2Vzc2lvbnMtY291cnQuaHRtbNIBAA?oc=5