சிறந்த திட்டங்களை உருவாக்குவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களிடம் கருத்து கணிப்பு – Maalaimalar தமிழ்

சென்னைச் செய்திகள்

சென்னை:

சென்னை என்பது பொது மக்கள் வாழக்கூடிய நகரமாக உள்ளதா? சென்னையில் நல்லது என்ன? கெட்டது என்ன? என்னென்ன திட்டங்கள் வேண்டும்? என்னென்ன திட்டங்கள் வேண்டாம்? என்பதை பொதுமக்களிடம் இருந்து அறிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது.

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் தங்கள் படிவங்களை http://eol2022.org/Citizen Feedback என்ற இணையதளத்தில் சென்று நிரப்பலாம். இது சேவை வழங்கல் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்த உதவும் வரிசையில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் முன் முயற்சியாகும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த கருத்து கணிப்பில் சாலைகள், வடிகால், மாசு, பாதுகாப்பு ஆகியவற்றின் தரம் எப்படி இருக்கிறது? நீங்கள் வாடகைக்கு வசிக்கிறீர்களா? வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகள் என்ன? என்பது உள்ளிட்ட சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

மேலும் வேலைவாய்ப்பு, சுகாதாரம் பற்றிய மற்ற சில கேள்விகளும் உள்ளன. இந்த படிவங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

பல்வேறு நகரங்களில் இருந்து வரும் கருத்துக்களை ஒப்பிட்டு மத்திய அமைச்சகம் எந்த நகரம் சிறந்த வாழ்க்கை தரத்தை கொண்டுள்ளது என்பதை அறிவிக்கும். முந்தைய ஆண்டுகளில் சென்னை நகரம் உயர்தரத்தை பெற்றுள்ளன. இந்த கருத்து கணிப்பின் மூலம் குறைந்த உள் கட்டமைப்பு கொண்ட நகரங்கள் கூட உயர் தரத்தை பெறும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், “சென்னையில் உள்ள மக்கள் அதிக எண்ணிக்கையில் கருத்து கணிப்பில் பங்கேற்று சென்னை மாநகராட்சி சிறந்த தரத்தை பெற ஒத்துழைக்க வேண்டும். சென்னையில் சாலைகள், மழை நீர் வடிகால்வாய் மற்றும் பிற கட்டமைப்புகளை மேம்படுத்த தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எழிலன் கூறுகையில், “இது போன்ற பொதுமக்களின் கருத்து கணிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். நகர்ப்புறத்தில் வசிக்கும் நடுத்தர மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள இது உதவும். கருத்து கணிப்பில் அவர்கள் பங்கேற்கும் போது நமது பொதுமக்களை நன்றாக புரிந்து கொள்ளவும், அவர்களுக்காக சிறந்த திட்டங்களை உருவாக்கவும் இது உதவும்.

பொதுவாக நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களில் பலர் தேர்தலில் பங்கேற்பதில்லை. எனவே இதுபோன்ற கருத்து கணிப்புகள் அவர்களுடன் இணைவதற்கு எங்களுக்கு உதவும்” என்றார்.

துணைமேயர் மகேஷ் குமார் கூறுகையில், “சென்னை நகருக்கு சிறந்த நடைபாதைகள் தேவை. எங்கள் முக்கியமான திட்டங்களில் ஒன்று அகலமான நடைபாதையாகும். இந்த கருத்து கணிப்பின் போது பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற முயற்சிப்போம். மேலும் அவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படுவோம்” என்றார்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiiAFodHRwczovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20vbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLXB1YmxpYy1vcGluaW9uLXBvbGwtb24tYmVoYWxmLW9mLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tdG8tZGV2ZWxvcC1iZXR0ZXItcHJvamVjdHMtNTQ5MjIx0gGMAWh0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9hbXAvbmV3cy9zdGF0ZS90YW1pbC1uZXdzLXB1YmxpYy1vcGluaW9uLXBvbGwtb24tYmVoYWxmLW9mLWNoZW5uYWktY29ycG9yYXRpb24tdG8tZGV2ZWxvcC1iZXR0ZXItcHJvamVjdHMtNTQ5MjIx?oc=5