மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை – ரெயில்வே மந்திரி … – தினத் தந்தி

சென்னைச் செய்திகள்

மதுரை-சென்னை தேஜஸ் ரெயில் இருமார்க்கங்களிலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே மந்திரிஅஸ்வினி வைஷ்ணவ் கூறியதாக மதுரை எம்.பி. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தில் நிறுத்தம்

மதுரை எம்.பி.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து, மதுரை-சென்னை தேஜஸ் ரெயிலை இரு மார்க்கங்களிலும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல தென்னக ரெயில்வே பரிந்துரைத்து உள்ளது. ஆனால், ரெயில்வே வாரியம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

எனவே, இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நிறுத்தம் வழங்க ஆவணம் செய்ய வலியுறுத்தப்பட்டது. அதன்பேரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளார்.

பின்னர், டி.ஆர்.இ.யூ. தொழிற்சங்கம், ஐ.சி.எப். ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அவரை சந்தித்து, ரெயில் தண்டவாள பராமரிப்பு பணியாளர்களான டிராக் மேன்கள் பணியின் போது, ரெயில் மோதி பரிதாபமாக உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரூ.4,800 மற்றும் ரூ.5,400 கிரேடு சம்பளம் வாங்கும் கணக்குப்பிரிவுடன் பிற பிரிவு பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டுள்ளதற்கு நன்றியும், விடுபட்ட பிரிவினருக்கு விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத உச்சவரம்பு பதவி உயர்வு பெறுவதை தடுப்பதாக இருப்பதால் அதனை நீக்க வேண்டும். தொழிற்சங்க அங்கீகார தேர்தல் புதிய தொகுப்பு சட்டத்தின் படி, அதிகபட்சமாக 5 வருடங்கள் என்ற போதிலும், தற்போது 9 வருடங்களாகியும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

வந்தேபாரத் மோட்டார்

இது தொழிற்சங்க ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதால், அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தொழில் உறவு தொகுப்பு சட்டம் 2024-ம் ஆண்டுக்குள் அமல்படுத்துவதில் சிரமம் இருப்பதால், கடந்த 2013-ல் தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 20 சதவீதம் வாக்கு பெற்ற அனைத்து சங்கங்களுக்கும் அங்கீகார அந்தஸ்து வழங்க வேண்டும். தண்டவாளம், சிக்னல், பாலங்கள் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரிஸ்க் அலவன்சு வழங்க வேண்டும்.

தென்னக ரெயில்வேயில் முறைப்படி அப்ரண்டீசுகளாக நியமிக்கப்பட்ட 531 பேரை பணி நிரந்தரம் செய்து பதவி உயர்வு வழங்க வசதியாக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்பு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும், வந்தேபாரத் ரெயிலுக்கான டிராக்சன் மோட்டார்களை வெளிநாடுகளில் இறக்குமதி செய்வதற்கு பதிலாக நமது நாட்டில் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என மந்திரி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiemh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vTmV3cy9TdGF0ZS9tYWR1cmFpLWNoZW5uYWktdGVqYXMtZXhwcmVzcy10by1zdG9wLWF0LXRhbWJhcmFtLXJhaWx3YXktbWluaXN0ZXItY29uZmlybXMtODU5NDIw0gEA?oc=5