சென்னை சுங்க இல்ல ‘வைகை’ கட்டடம் நாட்டிற்கு ஒரு முன் உதாரணம்: நிர்மலா சீதாராமன் – தினமணி

சென்னைச் செய்திகள்

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சென்னை சுங்க இல்லத்தின்  ‘வைகை’ அலுவலக கட்டடம் நாட்டிற்கு ஒரு முன் உதாரணம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

சென்னையில் உள்ள சுங்க மாளிகையில் சுமார் ரூ.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒன்பது அடுக்குகளைக் கொண்ட ‘வைகை’ புதிய அலுவலக கட்டடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் பேசுகையில், வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எளிதாக்கும் வகையில், அலுவலக வளாகத்தில் சுங்க அனுமதிக்கு தேவையான அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் அமைக்கப்படும். இந்த கட்டடம் இயற்கையில் தனித்துவமானது மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும், எதிர்காலத்தில் நாட்டின் எந்தப் பகுதியிலும் மற்ற அலுவலகங்களைக் கட்டுவதற்கான ஆற்றல் திறனுக்கான ஒரு முன் உதாரணமாக இருக்கும். அதாவது மொத்தக் கட்டுமானப் பணிகளும்  பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளில் கட்டப்படுவதால், சுற்றுசூழலை மாசுபாடுகளிடம் இருந்து தடுக்க முடியும். 

மேலும், இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து செயல்படத் தொடங்கிய பிறகு, இதனை சுங்கத் துறை தலைமையகத்துடன் இணைக்கப்படும் என்று கூறினார்.

சென்னை சுங்க இல்லத்தின்  ‘வைகை’ அலுவலக கட்டடத்திற்கு  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்.

இந்த ‘வைகை’ அலுவலக கட்டடத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணிச்சூழல் மிகச் சிறப்பாக இருக்கும் என்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு புத்தம் புதிய அம்சங்களுடன் கட்டப்படும் இந்தப் புதிய  அலுவலகம், வரும்காலங்களில் அனைத்து சுங்கத்துறை தொடர்பான கட்டட திட்டங்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார். ‘வைகை’ சுங்கத்துறை மாளிகை வளாகத்திற்கு வருபவர்களின் வர்த்தக நடவடிக்கை தொடர்பான அனைத்தும் சிறப்பான முறையில் அமையும் என்றார்.

இதையும் படிக்க | பல்லுயிர் பாதுகாப்புக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ்

இந்த கட்டடத்திற்கான பூமி பூஜை நடக்கும் இடத்திற்கு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டடம்  புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தூய்மை இந்தியா பிரசாரத் திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் நடவடிக்கையாக, இந்த பழமையான கட்டத்தின் கட்டக்கலையில் தேவையான மாற்றங்களைச் செய்து, பணி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் வகையிலும், பணியாற்றும் அதிகாரிகளுக்கான வசதிகளை நவீனமயமாக்கும் பணியையும் சுங்கத்துறை மேற்கொண்டுள்ளது. 

மேலும், பெண் ஊழியர்களின் நலனுக்காக காப்பகம் திறக்கப்படும். கட்டடம் எரிசக்தி சிக்கனமாக இருக்கும் என்றும், அலுவலக வளாகத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிப்பதில் பிரதமரின் ஸ்வச் பாரத் முயற்சியில் இருந்து உத்வேகம் பெற்றதற்காக அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தவர், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கான வர்த்தக வசதிகளை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். 
 
சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்கான அடையாளமாக நிதியமைச்சர் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

நிகழ்ச்சியில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை  வாரியத்தின் தலைவர் விவேக் ஜோரி, மத்திய நேரடி வரிகள் வாரியம்  தலைவர் நிதின் குப்தா, வருமான வரி மற்றும் சுங்கத்துறையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMigwFodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vdGFtaWxuYWR1LzIwMjIvZGVjLzE4L3ZhaWdhaS1jdXN0b21zLWhvdXNlLWNvbXBsZXgtYXQtYW4tZXN0aW1hdGlvbi1vZi1ycy05Mi1jcm9yZS1pbi1jaGVubmFpLTM5NjkxMjEuaHRtbNIBgAFodHRwczovL20uZGluYW1hbmkuY29tL3RhbWlsbmFkdS8yMDIyL2RlYy8xOC92YWlnYWktY3VzdG9tcy1ob3VzZS1jb21wbGV4LWF0LWFuLWVzdGltYXRpb24tb2YtcnMtOTItY3JvcmUtaW4tY2hlbm5haS0zOTY5MTIxLmFtcA?oc=5