சென்னை: போதைக்காக பயன்படுத்தப்படும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் – சிக்கிய இளைஞர்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை அடையாறு தேஷ்முக் சாலை, சிவாஜி மண்டபம் அருகில் அபிராமபுரம் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் வைத்திருந்த பையை போலீஸார் சோதனை செய்த போது அதில் உடல் வலி நிவாரண மாத்திரைகள் அதிகளவில் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது போதைக்காக இந்த உடல் வலி மாத்திரைகளை சிலர் பயன்படுத்துவதாகவும் அவர்களுக்கு சப்ளை செய்ய கொண்டு செல்வதாகவும் அந்த நபர் கூறினார்.

இதையடுத்து அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் கோகுல் என்கிற மதன் (23) என்றும் ஆழ்வார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் மதன் மீது ஏற்கெனவே ஒரு கொலை முயற்சி வழக்கு, திருட்டு வழக்கு என மூன்று வழக்குகள் உள்ளன. விசாரணைக்குப்பிறகு மதனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 1,500 உடல் வலி நிவாரண மாத்திரைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மதனை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiVGh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUveW91dGgtYXJyZXN0ZWQtaW4tY2hlbm5haS1hbmQtMTUwMC10YWJsZXRzLXNlaXplZNIBXmh0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL2FtcC9zdG9yeS9uZXdzL2NyaW1lL3lvdXRoLWFycmVzdGVkLWluLWNoZW5uYWktYW5kLTE1MDAtdGFibGV0cy1zZWl6ZWQ?oc=5