நெல்லை எஸ்.பி.யை கைது செய்ய தடை: சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவு – தினமணி

சென்னைச் செய்திகள்

சென்னை உயா் நீதிமன்றம்

திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை கைது செய்து ஆஜா்படுத்த, தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி கிராமத்தை சோ்ந்த பட்டியல் இனத்தை சோ்ந்த பரமானந்தம், தனது நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆதி திராவிடா், பழங்குடியினா் மாநில ஆணையத்தில் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நில ஆக்கிரமிப்பு புகாரில் அறிக்கை தாக்கல் செய்யாமல், ஆஜராகாமல் இருந்ததால் காவல் கண்காணிப்பாளா் சரவணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்த ஆணையம் அவரை கைது செய்து ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும் டிச.28-ஆம் தேதி ஆஜா்படுத்த வேண்டும் என பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்த கைது உத்தரவை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரவணன் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், காவல் கண்காணிப்பாளருக்கு பதிலாக கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி உள்ளாா். மேலும், “முதலில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னா் தான் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி காவல் கண்காணிப்பாளருக்கு எதிரான கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMisgRodHRwczovL3d3dy5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzIwLyVFMCVBRSVBOCVFMCVBRiU4NiVFMCVBRSVCMiVFMCVBRiU4RCVFMCVBRSVCMiVFMCVBRiU4OC0lRTAlQUUlOEUlRTAlQUUlQjglRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUYlODgtJUUwJUFFJTk1JUUwJUFGJTg4JUUwJUFFJUE0JUUwJUFGJTgxLSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBRiVFMCVBRiU4RCVFMCVBRSVBRi0lRTAlQUUlQTQlRTAlQUUlOUYlRTAlQUYlODglRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg5JUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThELSVFMCVBRSVBOCVFMCVBRiU4MCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRSVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlODklRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUUlQjAlRTAlQUUlQjUlRTAlQUYlODEtMzk3MDAyOS5odG1s0gGvBGh0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjIvZGVjLzIwLyVFMCVBRSVBOCVFMCVBRiU4NiVFMCVBRSVCMiVFMCVBRiU4RCVFMCVBRSVCMiVFMCVBRiU4OC0lRTAlQUUlOEUlRTAlQUUlQjglRTAlQUYlOEQlRTAlQUUlQUElRTAlQUUlQkYlRTAlQUUlQUYlRTAlQUYlODgtJUUwJUFFJTk1JUUwJUFGJTg4JUUwJUFFJUE0JUUwJUFGJTgxLSVFMCVBRSU5QSVFMCVBRiU4NiVFMCVBRSVBRiVFMCVBRiU4RCVFMCVBRSVBRi0lRTAlQUUlQTQlRTAlQUUlOUYlRTAlQUYlODglRTAlQUUlOUElRTAlQUYlODYlRTAlQUUlQTklRTAlQUYlOEQlRTAlQUUlQTklRTAlQUYlODgtJUUwJUFFJTg5JUUwJUFFJUFGJUUwJUFFJUJFJUUwJUFGJThELSVFMCVBRSVBOCVFMCVBRiU4MCVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSVBRSVFMCVBRSVBOSVFMCVBRiU4RCVFMCVBRSVCMSVFMCVBRSVBRSVFMCVBRiU4RC0lRTAlQUUlODklRTAlQUUlQTQlRTAlQUYlOEQlRTAlQUUlQTQlRTAlQUUlQjAlRTAlQUUlQjUlRTAlQUYlODEtMzk3MDAyOS5hbXA?oc=5