சென்னை: சென்னையில் தொழில்வரி கட்டாத75 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, வணிக வரி உள்ளிட்டவற்றை முறையாகச் செலுத்த வேண்டுமெனவும், கடைகளுக்கு உரிமம் பெறாதவர்கள் உடனடியாக பெறவேண்டும் எனவும் மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நிலுவையில் உள்ள வரியை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ஜிபி சாலையில் உள்ள பாரதி தெரு, செல்லப்பிள்ளையார் கோயில் தெருக்களில், தொழில் வரி மற்றும் தொழில்உரிமம் கட்டாத 75 கடைகளுக்கு நேற்று அதிகாலை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “திருவல்லிக்கேணி ஜிபி சாலையில் தொழில் வரி மற்றும் தொழில் உரிமம் பெறாத 150 கடைகளுக்கு உரிமம் பெறக் கால அவகாசம் கொடுக்கப்பட்டு அதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதில் 75 கடைகளின் உரிமையாளர்கள் உரிமம் பெற்றுவிட்ட நிலையில், உரிமம் பெறாத மீதமுள்ள 75 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. பின்னர் இதில் 35 கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக வரியைச் செலுத்தியதைத் தொடர்ந்து அவர்களது கடைகள் திறந்து விடப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMia2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTE3NDIxLWNvcnBvcmF0aW9uLXNlYWxzLTc1LXNob3BzLWZvci1ub3QtcGF5aW5nLWJ1c2luZXNzLXRheC5odG1s0gEA?oc=5